புதுடெல்லி: பரமக்குடியில் அமைந்துள்ள ஆர்.எம்.எஸ் தபால் நிலையத்தை மூடக் கூடாது என்று மக்களவையில் ராமநாதபுரம் எம்.பி. கே.நவாஸ்கனி வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்றத்தில், புதன்கிழமையன்று நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், “பரமக்குடி, என்னுடைய ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது. இங்கு அஞ்சல் பிரிப்பக அலுவலகம் (ஆர்.எம்.எஸ்.) கடந்த 1984-ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது வரையில், இங்கு தினந்தோறும் 2500 முதல் 3500 விரைவுத் தபால் மற்றும் பதிவுத் தபால்களை கையாண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. பரமக்குடி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு அருகாமையில் இந்த ஆர்.எம்.எஸ். அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் தபால் பைகளை வாங்குவதற்கும் பிரித்து அனுப்புவதற்கும் வசதியாக இந்த அலுவலகம் அமைந்துள்ளது.