பரமக்குடி, ஜன.11: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உட்கோட்டம், தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட 200 கிராமங்களில் சிசிடிவி கேமரா அமைப்பது தொடர்பாக போலீசார் மற்றும் கிராம தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் சபரிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிராமத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், கிராமங்களில் அனைத்து முக்கிய இடங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அப்பகுதியினர் ஆர்வம் காட்ட வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், குற்ற சம்பவங்களில் தொடர்புடையோரை பிடிக்க போலீசாருக்கு பெரிதும் உதவியாக இருப்பது சிசிடிவி கேமரா பதிவுகள். நகர்ப் பகுதிகளில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன.
ஆனால் கிராமங்களில் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. எனவே, கிராமங்களிலும் முக்கிய இடங்கள், வீதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். கூட்டத்தில் கிராமத் தலைவர்கள், முக்கியஸ்தர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். எஸ்ஐ முத்துமாணிக்கம் நன்றி கூறினார். கூட்டம் முடிந்ததும் காவல்துறை சார்பில் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
The post பரமக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க கலந்தாய்வு appeared first on Dinakaran.