பரம ஏழைகளையும் பாதிக்கும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு

1 week ago 1

சமையல் கியாஸ் மற்றும் பெட்ரோல்-டீசல் ஆகியவை மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமான தேவைகளாகும். இவற்றின் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்திருந்தாலும், அதன் விலை உயர்ந்த நேரத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக பெட்ரோல்-டீசல் விற்பனை செய்யும் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ரூ.21 ஆயிரத்து 201 கோடி இழப்பு ஏற்பட்டது.

இந்த இழப்புகளை சரிகட்ட மத்திய அரசாங்கம், அந்த நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கிவிடுகிறது. இதுபோல சமையல் கியாஸ் விற்பனையிலும் இந்த நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கடந்த ஆண்டு மார்ச் 8-ந்தேதியன்று சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர். இது தங்களுக்கு கிடைத்த மகளிர் தின பரிசாகவே கருதினார்கள். இந்த விலை குறைப்பு பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் பெறும் 10 கோடியே 30 லட்சம் ஏழை குடும்பங்களும் பலன் அடையும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இப்போது பெட்ரோல்-டீசலுக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.90 கலால் வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை இனி ரூ.21.90 ஆக உயர்த்தப்படுகிறது. இதுபோல ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.80-ல் இருந்து ரூ.17.80 ஆக உயர்த்தப்படுகிறது. கலால் வரியை உயர்த்தினாலும், அது பொதுமக்களை பாதிக்காது. அதாவது பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தினாலும் அதை காரணமாக வைத்து விற்பனை விலை உயர்த்தப்படாது என்பது நல்ல செய்தியாகும். இப்போது பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் உள்ள பெட்ரோல் விலையை விட, பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம் அந்த மாநில அரசுகள் பெட்ரோல் மீது விதிக்கும் அதிக வரிதான் என்கிறார் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி.

இதையெல்லாம் தாண்டி சமையல் கியாஸ் விலையை, அது பொதுவான சிலிண்டருக்கு என்றாலும் சரி, ஏழைகளுக்கான உஜ்வாலா திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் சிலிண்டர் என்றாலும் சரி ஒரே மாதிரியாக ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது பெண்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்ட உடனேயே 'தினத்தந்தி' சார்பில் பெண்களிடம் பேட்டி எடுத்தபோது, அவர்களில் சற்று வசதியானவர்கள் 'ஒரு பக்கம் வருமானம் உயர்ந்து இனி கொஞ்சம் சேமிக்கலாம் என்று நினைக்கும்போது பெருகி வரும் விலை உயர்வும், இதுபோல சிலிண்டர் விலையும் அந்த தொகையை செலவழிக்க வைத்துவிடுகிறது' என்று கூறினார்கள். நடுத்தர மற்றும் ஏழை மக்கள், 'இந்த ரூ.50 உயர்வு எங்களுக்கு சுமையை ஏற்படுத்தும்' என்றனர். பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி உயர்வினால் விலை உயராது என்று கூறியதுபோல, பெண்களுக்கு பயனளிக்கும் வகையிலும் சிலிண்டர் விலையை உயர்த்தாமல் அந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கம் மானியமாக கொடுத்துவிடலாமே என்பதுதான் பெண்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது. இப்படியே கியாஸ் விலை கூடிக்கொண்டே போனால் மீண்டும் விறகு அடுப்பு பயன்படுத்தவேண்டிய நிலை வந்துவிடும் போல் இருக்கிறதே என்று சில பெண்கள் ஆதங்கப்பட்டனர். 

Read Entire Article