
லக்னோ,
18-வது ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பண்ட் 118 ரன்களும், மிட்செல் மார்ஷ் 67 ரன்களும் அடித்தனர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 85 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் அடித்தனர். லக்னோ தரப்பில் வில்லியம் ஒரூர்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 39 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற பரபரப்பான சூழல் நிலவியது. அப்போது திக்வேஷ் ரதி வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் ஜிதேஷ் சர்மா கேட்ச் ஆனார். ஆனால் அந்த பந்து 'ப்ரீஹிட்' ஆனதால் கேட்ச் கண்டத்திலிருந்து தப்பித்த ஜிதேஷ் அடுத்த பந்தில் சிக்சர் விளாசி அரைசதத்தை கடந்தார்.
அத்துடன் அந்த ஓவரின் கடைசி பந்தில் பவுலர் முனையில் இருந்த ஜிதேஷ் சர்மா கிரீஸை விட்டு வெளியேறினார். இதை கவனித்த திக்வேஷ் 'மன்கட்' முறையில் ரன் அவுட் செய்தார். இது 3-வது நடுவரின் ரிவ்யூக்கு சென்றது.
ரீப்ளேயில் ஜிதேஷ் சர்மா கீரிசை விட்டு வெளியே நிற்பது தெளிவாக தெரிந்தது. இதனால் இது அவுட் என்று நினைத்தனர். ஆனால் திக்வேஷ் ரதி தனது பந்து வீச்சு ஆக்ஷனை முழுமையாக செய்துவிட்டு மன்கட் செய்துள்ளார். இதனால் 3-வது நடுவர் நாட் அவுட் என்று தீர்ப்பளித்தார்.
ஆனால் அதற்கு முன்பாகவே இந்த ரன் அவுட் அப்பீலை ரிஷப் பண்ட் திரும்ப பெற்று தனது பெருந்தன்மையை காட்டினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த ஜிதேஷ் சர்மா, ரிஷப் பண்டை கட்டியணைத்து பாராட்டினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.