பரபரப்பான சூழலில் இன்று பாமக செயற்குழு கூடுகிறது அன்புமணி பற்றி பேச ராமதாஸ் தடை: புதிய நிர்வாகிகள் 550 பேருக்கு அழைப்பு

3 hours ago 1

திண்டிவனம்: இன்று கூடும் செயற்குழுவில் அன்புமணி குறித்து ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது என பாமகவினருக்கு ராமதாஸ் தடை விதித்துள்ளார். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. பாமக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். கட்சியில் அன்புமணி ஆதரவாளர்களை ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களுக்கு பதவி வழங்கி வரும் ராமதாஸ் புதிய நிர்வாகிகளை வைத்து கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் கடந்த 5ம் தேதி பாமக தலைமை நிர்வாக குழுவை கூட்டி ஆலோசனை செய்த ராமதாஸ் பழைய குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகிளை நியமித்தார்.

இந்த குழுவில் இருந்த அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு தனக்கு விசுவாசமானவர்களை தேர்வு செய்தார். பாமக அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணி பெயரை தூக்கிவிட்டார். இந்நிலையில் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு கூட்டம் இன்று(8ம் தேதி) காலை 10 மணிக்கு ராமதாஸ் தலைமையில் கூடுகிறது. இந்த கூட்டதில் பாமக தலைமை நிர்வாகிகள், பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 550 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையது முகம்மது உசேன், வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, மகளிர் அணி சுஜாதா கருணாகரன், அருள் எம்எல்ஏ, சமூகநீதி பேரவை வக்கீல் கோபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஒரு சில மாவட்ட தலைவர்களுக்கு மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செயற்குழு கூட்டத்தில் பேச உள்ள தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட யாரும் தப்பி தவறி கூட அன்புமணி குறித்தோ, அவருக்கு பக்க பலமாக உள்ள நிர்வாகிகள் குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது என ராமதாஸ் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரிந்தவர்கள் இணைந்து செயல்பட வேண்டும், ஒன்று சேர வேண்டும் என்பது போன்ற பேச்சுக்களையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
செயற்குழு கூட்டத்தின் முக்கிய அஜெண்டாவே ஆகஸ்ட் மாதம் பூம்புகாரில் நடக்கும் மகளிர் மாநாடு தான். எனவே மாநாடு குறித்தும், கட்சி வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டும். இந்த கூட்டத்தில் பூம்புகார் மாநாட்டு பணிக்காக மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களையும் ராமதாஸ் அறிவிக்க உள்ளார்.

பூம்புகார் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டி கட்சி இன்னும் தன் முழு கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது என்பதை பறைசாற்றுவது தான் ராமதாசின் இப்போதைய முக்கிய குறிக்கோளாக உள்ளது. பூம்புகார் மாநாடு குறித்து செயற்குழுவில் ராமதாஸ் பேசுவார் என பாமக முக்கிய பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியையும், அவரது ஆதரவாளர்களையும் தூக்கியடித்த ராமதாஸ் இந்த கூட்டத்திலும் அது போன்ற அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

* பாஜவுக்கு எதிரான கூட்டணி ராமதாசிடம் கோரிக்கை
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை நேற்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரிப் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சமூக நீதி பேசுகின்ற தலைவர் ராமதாஸ், தற்போது மிகுந்த மன வேதனையில் இருக்கிறார். பாஜவுக்கு எதிரான கூட்டணி அமைக்க வேண்டுமென ராமதாசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். பாமகவிற்காக ராமதாஸ் கடுமையாக உழைத்தார். அவரை புறக்கணித்துவிட்டு யாராக இருந்தாலும் பாமகவை இயக்க முடியாது என்றார்.

The post பரபரப்பான சூழலில் இன்று பாமக செயற்குழு கூடுகிறது அன்புமணி பற்றி பேச ராமதாஸ் தடை: புதிய நிர்வாகிகள் 550 பேருக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article