திண்டுக்கல்: “பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்திப்பது விஜய்யின் விருப்பம். சீமான், பிரபாகரன் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஏற்கெனவே இது குறித்து நிறைய பேசியுள்ளேன்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் 2016 சட்டசபை தேர்தலின் போது நடந்த பொதுக்கூட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் கூடுதல் நேரம் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் 12 பேர் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் ஜேஎம்-1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக திங்கட்கிழமை வைகோ திண்டுக்கல் வருகை தந்தார். ஜேஎம் -1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சவுமியா மேத்யூ முன்னிலையில் ஆஜரானார். விசாரணை நடத்திய நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.