பரந்தூரில் பொதுமக்களை சந்திக்கும் விஜய்: கட்டுப்பாடு விதித்த காவல்துறை

2 hours ago 3

சென்னை,

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தமிழக வெற்றில் கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றி இருந்தார். இதனைத்தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாநில பொருளாளர் உள்ளிட்டோர் நேரடியாக மனு அளித்தனர்.

இந்த சூழலில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்திருந்தது. இதன்படி வரும் 20-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய், போராட்ட குழுவினரை சந்திக்க உள்ளார். இதன் மூலம் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக மக்களை நேரடியாக களத்திற்கு சென்று சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பரந்தூரில் பொதுமக்களை விஜய் சந்திக்க 2 இடங்களை காவல்துறை ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களில் எங்கு பொதுமக்களை சந்திக்கிறார் என்பதை இன்று மாலைக்குள் தெரிவிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிக கூட்டத்தை கூட்டாமல், அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான் வர வேண்டும் என்றும் கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article