எங்களுடைய திட்டங்களை நகலெடுத்து உள்ளது பா.ஜ.க.: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

3 hours ago 3

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா காக்கர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, டெல்லியில் நலத்திட்டங்கள் தொடரும் என பா.ஜ.க.வினர் அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் தெளிவுப்படுத்தி உள்ளனர்.

கெஜ்ரிவாலின் திட்டங்களை அவர்கள் தத்தெடுத்திருக்கின்றனர் என்றால், பிரதமர் மோடி இன்னும் எங்களுடைய திட்டங்களை இலவசங்கள் என பொய் கூறி வருகிறாரா? நேற்று வெளியிடப்பட்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடியின் ஒப்புதல் இருக்கின்றதா? என்று அவர் கேட்டுள்ளார்.

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் மற்றும் மத்திய மந்திரியான ஜே.பி. நட்டா, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில், பெண்களுக்கான நலத்திட்டங்கள், மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ், டெல்லி பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவியாக ரூ.2,500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து நட்டா பேசும்போது, 2021-ம் ஆண்டில், மாதம் ஒன்றிற்கு ரூ.2,100 வழங்கப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்தது. ஆனால், டெல்லியிலோ, பஞ்சாப்பிலோ அவர்கள் அதனை வழங்கவில்லை. 2024-ம் ஆண்டில் மாதத்திற்கு ரூ.1,000 வழங்குவோம் என அவர்கள் தெரிவித்தனர். ஆனால், எதிர்பார்த்தது போன்றே வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் வழங்குவதிலும் ஆம் ஆத்மி தோல்வி அடைந்து விட்டது என கூறினார்.

ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலும், எங்களுடைய நிர்வாக மாதிரியை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. அவர்களுக்கு என்று எந்தவித யோசனைகளோ அல்லது தொலைநோக்கு பார்வையோ இல்லை என்று குற்றச்சாட்டாக கூறினார்.

Read Entire Article