பயிர்க் கழிவுகளை எரித்தால் அவ்வளவுதான்.. அபராதத்தை இரு மடங்காக உயர்த்தியது மத்திய அரசு

2 months ago 10

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் குளிர் காலத்தின்போது காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு செல்வது வழக்கம். காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரிப்பதால் மக்களுக்கு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, தொழிற்சாலை உமிழ்வு மற்றும் கட்டுமானப் பணிகளால் பரவும் தூசுக்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள் அறுவடைக்கு பிறகு வைக்கோல் உள்ளிட்ட பயிர் கழிவுகளை எரிப்பதால் பரவும் புகையும் டெல்லி காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

அறுவடைக்கு பிறகு பயிர்க் கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. அபராதமும் விதிக்கப்படுகிறது. எனினும், அவற்றை அப்புறப்படுத்த பணம் செலவாகும் என்பதாலும், பயிர்க்கழிவுகளை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்புகள் இல்லாததாலும் பல விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அரசாங்கம் கைது நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு தொடர்ந்தபோதும் இந்த நிலை மாறவில்லை.

இந்நிலையில், நடப்பு குளிர்காலத்தில் டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதியில் காற்று மாசு மோசமான நிலைக்கு சென்றுள்ளதால், பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதத்தை மத்திய அரசு இரு மடங்காக உயர்த்தி உள்ளது.

காற்று மாசுபாடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து, இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 2 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரித்தால் சுற்றுச்சூழல் இழப்பீடாக இனி 5,000 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த தொகை 2,500 ஆக இருந்தது. 2 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்கான அபராதம் ரூ.5,000-க்கு பதிலாக ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு 30,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானாவில் பயிர்க்கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் அதிகரித்த காலகட்டமான, நவம்பர் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதாக டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் ஆய்வறிக்கை கூறுகிறது.

Read Entire Article