உளுந்து மற்றும் பச்சைப்பயறு பயிர்களை சாகுபடி செய்ய இது தோதான தருணம். இந்தப் பயிர்களை சிறப்பாக சாகுபடி செய்து, அதிக மகசூல் பெற என்னென்ன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என விளக்குகிறார் கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மை இயக்குநர் கிருஷ்ணவேணி.நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் பயறுவகைப் பயிர்கள் வருடம் முழுவதும் இறைவைப் பயிராகப் பயிரிடப்படுகிறது. மானாவாரிப் பயிராக ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டங்களில் பயிரிடப்படுகிறது. தை மற்றும் மாசி மாதத்தில் நெல் தரிசில் சம்பா, தாளடியில் பயறு வகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
உளுந்து மற்றும் பச்சைப்பயறை விதைப்பதற்கு விதை நேர்த்தி மிக அவசியம். ஒரு எக்ேடருக்கு தேவையான விதைகளுடன் ரைசோபியம் அல்லது 600 கிராம் டிரோக்கோடேர்மா விரிடியை அரை லிட்டர் ஆறிய அரிசிக்கஞ்சியுடன் கலந்து, சீராக விதை முழுவதும் படும்படி நன்றாக கலக்க வேண்டும். இந்தப் பயிர்களில் அதிக மகசூலைப் பெறுவதற்கு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையில் பராமரிப்பது அவசியம். பயிரின் வளர்ச்சியைப் பொருத்து வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், காய்க்கும் தருணம் போன்ற பருவங்களில் நீர்பாய்ச்ச வேண்டும். பயறு வகைப் பயிர் சாகுபடிக்கு நிலத்தில் நீர் தேங்கக்கூடாது. இதனால் செடிகள் அழுகிவிடக் கூடிய நிலை நேரிடலாம்.விதைத்த பிறகு 15 அல்லது 30ம் நாட்களில் கைகளைக் கொண்டு களை நிர்வாகம் செய்ய வேண்டும். பெண்டிமெத்திலின் என்ற களைக்கொல்லியை விதைத்த 3ம் நாளில் மண்ணில் படும்படி ஒரு ஹெக்டேருக்கு 3.3 லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். விதைத்த 15ம் நாளுக்குப் பின்பு குயிசலேட் ஈதைல் மற்றும் ஈமாசிட்பைர் என்ற களைக்கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நிலத்தை நன்கு உழுது ஒரு ஹெக்டேருக்கு 12.5 டன் தொழுஉரத்தினை கடைசி உழவின்போது சீராக இடவேண்டும். தமிழ்நாடு அரசு வழங்கும் நுண்ணூட்டக் கலவையை 5 கிலோ/ ஹெக்டேர் என்ற அளவில் பயிருக்கு இடுவதன் மூலம் பயிரின் மகசூல் அதிகரிக்கும். ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ டிஏபியை பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு தேவையான 12.5 கிலோ டிஏபியை 10-15 லிட்டர் நீரில் முதல் நாளே கலந்து வைக்க வேண்டும். பின்பு நன்கு வடிகட்டி தெளிவான கரைசலை 625 லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும். தெளிக்கும்போது செடிகள் நனையும்படி தெளிக்க வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் தெளித்தல் அவசியம். பூச்சி மற்றும் நோய் மருந்துகளுடன் கலந்து தெளிக்கக்கூடாது.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பூச்சி நிர்வாகம்
அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி மற்றும் இலை சிலந்தி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் பயிரைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும். இவற்றை இட்டாகுளோரேபிரையிட் 30.5 சதவீதம் எஸ்சி அல்லது தியேமேன்தாக்ஸ்சம் 30 சதவீதம் எப்எஸ் (அ) அசிடாமாபிரையிட் 20 சதவீதம் எஸ்பி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
புழு நிர்வாகம்
பச்சை காய்ப்புழு காய்களைத் துளைத்தும், பருப்பைத் தின்றும் சேதம் விளைவிக்கும். காய்ப்புழு பூவையும், மொட்டையும், பிஞ்சுகளையும் தின்று அழிக்கும். புகையிலைக் காய்ப்புழு இலைகளில் அதிகளவில் சேதத்தை உண்டுபண்ணும். இவற்றைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறியை 12 அமைக்கலாம். விளக்குப்பொறிகள் மூலம் தாய் அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம். வரப்பு ஓரங்களில் ஆமணக்கு செடிகளைப் பயிரிடலாம். குளோரிபைரிபாஸ் 50 சதவீதம் இசி அல்லது பிப்ரோனில், மொமேட்டின் பேன்சோயேன் போன்ற மருந்துகளில் ஒன்றினை நீரில் கலந்து பயிர் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
நோய்க் கட்டுப்பாடு
ஆந்திராக்ஸ், இலைப்புள்ளி நோய், வேர் அழுகல் நோய், துரு நோய் போன்ற நோய்கள் பயிர்களைத் தாக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மஞ்சள் தேமல் நோய் அதிக அளவில் விளைச்சல் குறைத்து
விடும். நோய்களைக் கட்டுப்படுத்த மேன்கேசிப் 45 அல்லது மேடாலாக்சில் என்ற பூஞ்சாணக்கொல்லி ஒன்றை தெளிக்க வேண்டும். மஞ்சள் தேமல் நோய் ஈக்கள் மூலம் பரவுகிறது. இந்நோய் தாக்கப்பட்டவுடன் இலைகளில் மஞ்சள் நிறம் தோன்றி, முழுவதுமாகப் பரவும். இந்நோய் கண்டவுடன் செடிகளைக் களைதல் வேண்டும். பின்பு இமிடாகுளேபிரையிட் மருந்தினைத் தெளிப்பதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். ஒருங்கிணைப்பு முறையில் பயிர்களை சாகுபடி செய்தவன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம். கோயம்புத்தூர் மாவட்த்தின் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.வே.கிருஷ்ணவேணி, தொழில் நுட்ப உதவியாளர்கள்
ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
உளுந்து பயிர்களில் வம்பன் 7, 8, 9, 10, 11 ஆகிய ரகங்கள் நல்ல பலன் கொடுக்கும். இந்த ரகங்கள் மஞ்சள் தேமல் நோய் மற்றும் சாம்பல் நோய் போன்றவற்றைத் தாங்கி வளரும் இயல்பு கொண்டவை.
The post பயறுவகைப் பயிர்களும்…சில பயனுள்ள குறிப்புகளும்! appeared first on Dinakaran.