பயறு வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைக்கலாம்

5 months ago 15

விருதுநகர், டிச.11: பயறு வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைக்கலாம் என விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நீர் ஆதாரம் உள்ள இடங்களில் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரக்கூடிய பயறு வகைப் பயிர்களில் விதைப்பண்ணை அமைத்து விவசாயிகள் பயன் அடையலாம். பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண் வளத்தையும் காக்க முடியும்.

நெல் பயிர் மண்ணில் உள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு வளரும் தன்மை கொண்டது. ஆனால் பயறு வகைப் பயிர்களின் வேர் முடிச்சுகளில் ஆகாயத்தில் உள்ள நைட்ரஜன் சேமித்து வைக்கப்படுவதால் மீண்டும் மண் வளம் மிக்கதாக மாறுகின்றது. விதைப்பண்ணை அமைப்பதற்கு உளுந்து பயிரில் வம்பன் 6, வம்பன் 9, வம்பன் 10 ஆகிய ரகங்களை உபயோகப்படுத்தலாம். ஆதாரநிலை அல்லது சான்று நிலை விதைகளை வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள், உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களிலும் பெறலாம்.

ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதையே போதுமானது. குறைந்த அளவு நீர்தான் தேவைப்படும். விதைக்கும் போது ஒரு பாக்கெட் ரைசோபியம், ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரீயாவை 200 கிராம் ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து அந்தக் கலவையில் 8 கிலோ விதையை கலந்து நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தேவையான தழைச்சத்து மற்றும் மணிச்சத்து பயிருக்கு கிடைத்து மகசூல் அதிகரிக்கும். விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் மூலம் பதிவு செய்யலாம்.

The post பயறு வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article