
சென்னை,
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் பாலாஜி. இவர் அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கத்தில் 'பயர்' படத்தில் நடித்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டிகே இசையமைத்துள்ளார். இப்படம் 2020-ம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனரான சதீஷ்குமார் இயக்கத்தில் பாலாஜி நடித்துள்ள 'பயர்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
பிசியோதெரபி மருத்துவர் பாலாஜி முருகதாஸை நேர்மையானவராக நினைத்து நான்கு பெண்கள் நெருங்கி பழகுகின்றனர். திடீரென்று பாலாஜி முருகதாஸ் காணாமல் போகிறார். அவரை போலீசார் தேடுகின்றனர். போலீசாரின் விசாரணையில் அவர் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வருகிறது.
பின்னர் அவர் மாயமானதன் பின்னணி என்ன? நான்கு பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? என்பதற்கு பரபரப்பாக விடை சொல்கிறது மீதி கதை.

பாலாஜி முருகதாஸை முகமூடி மனிதன் தாக்கி தூக்கி செல்வதுபோல் திகிலோடு தொடங்கி கடைசி வரை விறுவிறுப்பை படம் தக்க வைத்துள்ளது. பாலாஜி முருகதாஸ் அபாரமாக நடித்து கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். முதல் பாதியில் சாந்தமாகவும் பிற்பகுதியில் குரூர முகம் காட்டியும் அதிர வைக்கிறார். பிசியோதெரபி சிகிச்சை மூலம் பெண்களை வசப்படுத்தும் காட்சிகள் அதிர வைக்கிறது.
ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அமைதியாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவர் துப்பு துலக்கும் காட்சிகள் சீட் நுனிக்கு இழுக்கும் விறுவிறுப்பு ரகம். மிகையான ஆபாசம் பலகீனமாக இருந்தாலும் சொல்ல வந்த கதைக்கு அழுத்தம் கொடுக்க அவை பயன்பட்டு இருப்பது சிறப்பு.
சாக்ஷி அகர்வால் அழகும் கவர்ச்சியுமாய் கதாபாத்திரத்துக்கு வலுசேர்த்துள்ளார். ரச்சிதா மகாலட்சுமி கடன் கொடுத்தவனிடம் சிக்கி படும் அவஸ்தையை நேர்த்தியாக முகத்தில் கடத்தி உள்ளார். அரைகுறை உடையில் படுக்கை அறையில் அத்துமீறும் காட்சி கிளுகிளுப்பின் உச்சம்.

சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷான் கதாபாத்திரங்களில் நேர்த்தி. டி.சிவா. சிங்கம்புலி ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கி உள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி, ஜீவா, அனு விக்னேஷ் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு. சதீஷ் ஜி. ஒளிப்பதிவு, டி.கே பின்னணி இசை பலம்.
நல்லவர் போல் பழகும் காமுகர்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சமூக பொறுப்போடு விழிப்புணர்வு படத்தை சுவாரஸ்யமாகவும் ரசிக்கும் வகையிலும் கொடுத்துள்ள ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இயக்குனராக ஜெயித்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராதது.