பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை 2 நாளில் ரஜினி வீடு திரும்புவார்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

3 months ago 22

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை சீராக உள்ளதாகவும் அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது ‘கூலி’ படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் சேர்க்கப்பட்டார்.

சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்னை காரணமாக அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தற்போது இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக அப்பல்லோ மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ரஜினிகாந்திற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்துக்கு அறுவை சிகிச்சையின்றி மருத்துவ சிகிச்சை தரப்பட்டுள்ளது.

வழக்கமாக தரப்படும் சிகிச்சையிலே அவர் உடல் நலம் தேறியுள்ளார். அவரது உடல் நலம் தற்போது சீராக உள்ளது. 2 தினங்களில் அவர் வீடு திரும்புவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் டாக்டர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார்.

அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்றும் 2 தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் அவரிடம் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் மாலையில் ரஜினிகாந்த் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ரஜினிசிகிச்சை பெறும் தகவல் கிடைத்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் நலம் பெற வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

* ‘விரைந்து நலம் பெற விழைகிறேன்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” எனக் கூறியுள்ளார்.

The post பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை 2 நாளில் ரஜினி வீடு திரும்புவார்: மருத்துவமனை நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article