அண்ணாநகர், பிப்.15: மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சரவண குருநாதன் (40). கிண்டியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 12ம் தேதி அதிகாலை கிண்டியில் இருந்து பேருந்தில் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து பூந்தமல்லிக்கு புறப்பட்ட (தடம் எண் 101) பேருந்தில் ஏற ஓடியபோது, அதற்குள் பேருந்தின் தானியங்கி கதவு மூடியது. பேருந்தும் வேகமாக சென்று விட்டதால் ஆத்திரமடைந்த சரவண குருநாதன், அங்கிருந்த டைம் கீப்பர் வடிவேல் (70) என்பவரிடம் இதுபற்றி முறையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில், தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த வடிவேல், சரவண குருநாதனின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சென்று தாக்கினார். மேலும் அங்கிருந்த கண்டக்டர் திருநாவுக்கரசு, டிரைவர் கோபி ஆகியோரும் ஓடி வந்து காலால் எட்டி உதைத்தனர். இதில் சரவண குருநாதன் அலறி துடித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், தட்டி கேட்டனர். அதை கண்டு கொள்ளாமல் மேலும் தாக்கினர். தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், கண்டக்டர், டிரைவர், டைம் கீப்பர் ஆகியோரை சமாதானம் செய்தனர். ஆனால் காயமடைந்த சரவண குருநாதனை கண்டுகொள்ளவில்லை. பின்னர், அவர் அங்கிருந்து வீட்டிற்கு சென்றார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இதுபற்றி விசாரணை நடத்திய மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள், பயணி சரவண குருநாதனை சரமாரியாக தாக்கிய கண்டக்டர் திருநாவுக்கரசு, டிரைவர் கோபி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தனர். அதே போல் டைம் கீப்பர் வடிவேல் போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற நிலையில், ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்ததால், அவரை வேலையில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
The post பயணியை சரமாரி தாக்கிய விவகாரம் டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்: டைம் கீப்பர் வேலை விட்டு நீக்கம் போக்குவரத்து கழகம் நடவடிக்கை appeared first on Dinakaran.