பயணிகள் எளிதில் அறியக் கூடிய வகையில் மெட்ரோ ரயிலில் எல்இடி வழித்தட வரைபட திரைகள்: ஆகஸ்டு மாதத்திற்குள் அனைத்து ரயில்களிலும் பொருத்த திட்டம்

3 months ago 8

சென்னை: பயணிகள் எளிதில் அறியக்கூடிய வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எல்இடி வழித்தட வரைபட திரைகள், ஆகஸ்டு மாதத்திற்குள் அனைத்து ரயில்களிலும் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது.

சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் முதற்கட்ட திட்டத்தில் உள்ள ரயில்களில் எல்இடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த திரையின் மூலம் பயணிகள் எளிதில் அறியக்கூடிய வகையில் ரயில்கள் செல்லும் பாதையை வரைபடமாக திரையிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் முதற் கட்ட திட்டத்தில் பயணிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விவரங்களை காட்டும் எல்இடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ரயில் எந்த நிலையத்தில் நிற்கிறது, அடுத்த வரும் 2 ரயில் நிலையங்களின் பெயர், முந்தைய 2 ரயில் நிலையங்களின் பெயர், நிலையங்களின் திசையைக் குறிக்க இடையில் அம்புக்குறியுடன் கூடிய அம்சங்களுடன் திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது.

அதேபோல் திரையின் வலதுபுறத்தில் நேரம், வெப்பநிலை மற்றும் ரயில் செல்லக்கூடிய வேகம் போன்றவை காட்சிப்படுப்படும். கதவுகள் எந்த திசையில் திறக்க உள்ளது, கதவுகளின் அருகில் பயணிகள் நின்றால் விலகி நிற்கவும் போன்ற அறிவிப்புகளும் திரையில் ஸ்க்ரோலிங் முறையில் எச்சரிக்கை செய்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஒரு பெட்டியில் 4 திரைகள் என 16 திரைகள் ஒரு ரயிலில் பொருத்தப்படுகிறது. இந்த எல்இடி திரையானது கடந்த ஒருவாரமாக சோதனை முறையில் ரயில்களில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. முறையாக செயல்படுகிறதா என்பதும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதுவரை எவ்விதமான பிரச்னையும் இல்லை. ஆகஸ்டு மாதத்திற்குள் முற்கட்ட திட்டத்தில் உள்ள 52 ரயில்களிலும் இந்த வழித்தட வரைபட எல்இடி திரை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post பயணிகள் எளிதில் அறியக் கூடிய வகையில் மெட்ரோ ரயிலில் எல்இடி வழித்தட வரைபட திரைகள்: ஆகஸ்டு மாதத்திற்குள் அனைத்து ரயில்களிலும் பொருத்த திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article