சென்னை: சென்னை- திருச்சி இடையே ரயில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது சென்னை – ரேணிகுண்டா, அரக்கோணம் – ஜோலார்பேட்டை, சென்னை – கூடூர் ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ. வரை வேகத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால் மற்ற வழித்தடங்களில் 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதற்காக தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைப்பது, வேகக் கட்டுபாடுகளை அகற்றுவது, வளைவுகளை நீக்குவது உள்பட பல்வேறு பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. ரயில் நிலையங்களில், ரயில் வழித்தடங்களில் வேகமாக இயக்க தடையாக உள்ள விஷயங்களை சரி செய்த பின்னர் அந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகம் 130 கிமீ வரை அதிகரிக்கப்படும். ஆனால் தமிழ்நாட்டில் மற்றொரு முக்கிய வழித்தடமாக இருக்கும் சென்னை – விழுப்புரம் – விருத்தாசலம் திருச்சி பிரிவில் ரயில்கள் 90 கிமீ முதல் 100 கிமீ வரையிலான வேகத்திலேயே இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்ததாவது:
தற்போது சென்னை – விழுப்புரம் – திருச்சி வழித்தடத்தில் எந்த ரயில்களாக இருந்தாலும் மணிக்கு 80 முதல் 110 கி.மீ. வேகம் வரையில் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிகமான வளைவுகள் இந்த வழித்தடத்தில் இருக்கின்றன. பழைய பாலங்கள் மேம்படுத்தப்படாமல் இருக்கின்றன. இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் இந்த ரயில் வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தது. இந்நிலையில், இத்தடத்தில் வளைவுகளை நீக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. முக்கிய பாதைகளில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் விதமாக வளைவுகளை நீக்குவது, பழைய பாலங்களை மேம்படுத்துவது, பழைய ரயில் பாதைகளை புதுப்பிப்பது போன்ற பணிகள் தெற்கு ரயில்வே தற்போது மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பாதைகளும் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக திருச்சி வழித்தடத்தை பொறுத்தவரையில் செங்கல்பட்டு வரையில் ரயில்கள் 110 கிமீ வேகத்தில் செல்ல முடியும். ஆனால் செங்கல்பட்டு தாண்டி, விழுப்புரம், திருச்சி வழித்தடத்தில் 90 முதல் 110 கிமீ வேகம் வரையில் தான் ரயில்களால் போக முடியும். ஏனெனில் வளைவுகள் அதிகமாக உள்ளன. பாலங்கள் பழைய பாலங்கள் ஆகும். எனவே தேவையற்ற வளைவுகளை நீக்குவது, பழைய பாலங்களை மேம்படுத்துவது அல்லது புதுப்பிப்பது, சிக்னல் தொழில்நுட்பத்துடன் ரயில் பாதைகளை புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளை தற்போது செய்து வருகிறோம். இந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் முடியும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின்னர் தென்மாவட்ட ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். இதனால் சென்னை திருச்சி வழித்தடத்தில் பயண நேரம் 30 முதல் 40 நிமிடங்கள் வரை குறையும். இவ்வாறு கூறினார்.
இப்போது சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 3.50 மணி நேர நிமிடங்கள் செல்கின்றன. மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் சராசரியாக 5 மணி நேரத்தில் செல்கின்றன. இந்த வழித்தடத்தில் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களும் சென்னையில் இருந்து திருச்சிக்கு சுமார் 4 முதல் 4.30 மணி நேரத்தில் சென்று விட முடியும். இது மட்டுமின்றி வந்தே பாரத், தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களும் 3 முதல் 3.15 மணி நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல முடியும். இந்த பயண நேரம் குறைப்பு காரணமாக சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ரயில்கள் 9 முதல் 9.30 மணி நேரத்தில் சென்று விடலாம். ஆகவே வழித்தடத்தை மேம்படுத்தும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
The post பயண நேரம் 40 நிமிடம் வரை குறையும்; சென்னை- திருச்சி இடையே ரயில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை: தென்மாவட்ட பயணிகளுக்கு நல்ல செய்தி appeared first on Dinakaran.