ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. நேற்று உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் உமர் அப்துல்லா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் மூளையாக செயல்படுவர்களை கண்டறிய, பயங்கரவாதிகளை கொல்லாமல் உயிருடன் பிடிக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார். பரூக் அப்துல்லாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பரூக் அப்துல்லா இது தொடர்பாக அளித்த பேட்டியில், "பயங்கரவாதிகளை விசாரிப்பதன் மூலம் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்படுபவர்கள் பற்றிய தகவல்களை பெற முடியும். ஜம்மு காஷ்மீரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடக்கிறதா? என சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரணை செய்ய வேண்டும். பயங்கரவாதிகள் உயிருடன் பிடிபட்டால் விசாரணை நடத்துவோம். எனவே பயங்கரவாதிகள் கொல்லப்படக்கூடாது. அவர்களை உயிருடன் பிடித்து அவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று விசாரிக்க வேண்டும். உமர் அப்துல்லா அரசை சீர்குலைக்க முயற்சிக்கும் ஏஜென்சி இருக்கிறதா என விசாரிக்க வேண்டும்" என்றார்.
பரூக் அப்துல்லாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது தெரியும் போது இதில் விசாரணை நடத்துவதில் என்ன இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.