பயங்கரவாதத்துக்கு இது பதிலா..?

7 hours ago 4


காஷ்மீரில் உள்ள பஹல்காம் அருகில் இமயமலையின் 8 ஆயிரம் அடி உயரத்தில் பைன்மர காடுகளுக்கு இடையில் அமைந்திருக்கும் பைசரன் புல்வெளியில் கடந்த 22-ந்தேதி ஏறத்தாழ 250 சுற்றுலாப்பயணிகள் இயற்கையின் எழிலை மகிழ்வோடு அனுபவித்துக்கொண்டு இருந்தவேளையில், திடீரென 4 பயங்கரவாதிகள் கைகளில் துப்பாக்கி ஏந்தி வந்து மதத்தைக்கேட்டு 25 பேரையும், அவர்களின் செயலைத்தடுத்த முஸ்லிம் குதிரை ஓட்டி இளைஞரையும் சுட்டுக்கொன்றனர்.

அந்த 4 பயங்கரவாதிகளில் 3 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இந்த கொடுஞ்செயலைக்கண்டு ஒட்டுமொத்த இந்தியாவுமே கொதித்தெழுந்தது. உலக நாடுகள் அனைத்தும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி உடனடியாக 5 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமானது, இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட சிந்துநதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதுதான்.

இந்த ஒப்பந்தம் 1960-ம் ஆண்டு நவம்பர் 27-ந்தேதி பாகிஸ்தானின் தலைநகரான கராச்சியில் கையெழுத்தானது. இதில் அப்போதைய இந்திய பிரதமர் நேருவும், பாகிஸ்தான் பிரதமர் முகமது அயூப்கானும் கையெழுத்திட்டனர். அதற்கு மத்தியஸ்தராக உலக வங்கி இருந்தது. உலக வங்கி சார்பில் இலிப் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சாராம்சம் என்னவென்றால், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஓடும் நதிகளின் தண்ணீரை பங்கிடுவதுதான். இந்தியாவில் உள்ள 6 நதிகளில் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய 3 நதிகள் பாகிஸ்தானுக்கும் ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய நதிகள் இந்தியாவுக்கும் சொந்தமானது.

பாகிஸ்தானுக்கு செல்லும் 3 நதிகளில் இந்தியா மின்திட்டங்களுக்கும், குடிநீர் தேவைக்காகவும் மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நதிகள் இந்தியாவில் இருந்து ஓடினாலும் மொத்த தண்ணீரில் 80 சதவீதத்தை பாகிஸ்தான்தான் பயன்படுத்தியது. ஆக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிறகுதான், பாகிஸ்தான் செழிப்படையத் தொடங்கியது.

இந்த 3 நதிகள் மூலமாக பாகிஸ்தானில் 4.5 கோடி ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. இது உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பாசன அமைப்புகளில் ஒன்றாகும். இந்த நீர் ஆதாரத்தால் பாகிஸ்தானில் 3 பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. கோதுமை, அரிசி, சர்க்கரைக்கிழங்கு உள்பட பல பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

மிகமுக்கியமாக பாகிஸ்தானில் உள்ள 70 சதவீத மக்கள்தொகையின் குடிநீர் தேவையையும் பூர்த்திசெய்வதோடு மட்டுமல்லாமல், தொழில்துறைக்கும் நீர்த்தேவையை நிறைவேற்றுகின்றன. பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இந்தியாவில் இருந்து செல்லாது. இதற்காக குறுகியகால, இடைக்கால மற்றும் நீண்டகால திட்டங்களை தயாரித்துக்கொண்டு இருக்கிறோம் என்று மத்திய நீர்வளத்துறை மந்திரி சி.ஆர்.பாட்டீல் உறுதிபட தெரிவித்துவிட்டார்.

இந்த தாக்குதலை செய்தவர்களுக்கும், இந்த வஞ்சக செயலுக்கு திட்டமிட்டு கொடுத்தவர்களுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அவர்களுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுக்கவேண்டும். ஆனால் இவ்வாறு நதிநீரையும் பாகிஸ்தானுக்கு போகாமல் தடுத்தால் அந்த அரசாங்கத்துக்கு பாதிப்பு என்பதோடு நின்றுவிடாது. பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். போர்கள் பலவிதம். அதில் தண்ணீரையும் பயன்படுத்தினால் சாதாரண அப்பாவி பொதுமக்கள் துவண்டு போய்விடுவார்கள்.

இதையே நாளை சீனாவும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தினால் அங்கிருந்து இந்தியாவுக்குள் ஓடிவரும் பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதி தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும். இந்த நிலை வராமல் தடுக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அனுப்புவதை அடியோடு நிறுத்தவேண்டும். இந்தியாவும் தண்ணீர் யுத்தம் தொடர்பான தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

Read Entire Article