பம்பை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை 15-ந்தேதி முதல் டிசம்பர் 26-ந்தேதி வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 30-ந்தேதி முதல் 2025 ஜனவரி 19-ந்தேதி வரையும் நடைபெறுகிறது. நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்வதற்காக வந்தவண்ணம் உள்ளனர். சபரிமலை வரும் பக்தர்களின் வாகனம் நிலக்கல்லில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்கிருந்து அரசு பேருந்து மூலம் பம்பை சென்று அங்கிருந்து சபரிமலை செல்வர். அந்த வகையில் அரசு பேருந்து ஒன்று பம்பையில் பக்தர்களை இறக்கிவிட்டு, மீண்டும் அங்கிருந்து நிலக்கல் திரும்பும் பக்தர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த பேருந்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதையடுத்து பேருந்தில் இருந்த பக்தர்கள் அனைவரும் உடனடியாக இறக்கிவிடப்பட்டனர். தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.