சென்னை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக வருகிற 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல் சாந்திகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். இந்த சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது. இதற்கிடையே நடப்பு சீசனில் அய்யப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதி, சாலை மேம்பாடு, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணிகள் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்தநிலையில், மண்டல பூஜை முதல் மகர ஜோதி வரை தமிழக பஸ்கள் பம்பை வரை இயக்கப்படும் என்று தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பார்க்கிங் பிரச்சினை எழாத வகையில், 2 தமிழக பஸ்களை அங்கே நிறுத்தி வைக்க கேரள போக்குவரத்துத்துறை தேவஸ்தானத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக எஸ்.இ.டி.சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பம்பையில் இருந்து தமிழக பஸ்கள் புறப்படுவதன் மூலம் பக்தர்களுக்கு பயண அசதி குறையும் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு வரை தமிழக அரசுப் பஸ்கள் நிலக்கல்லில் இருந்து மட்டுமே புறப்பட கேரள அரசு அனுமதித்திருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று எஸ்.இ.டி.சி பஸ்கள் பம்பையில் இருந்து பக்தர்களை ஏற்ற கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது. கேரள அரசின் அனுமதியால் தமிழக பக்தர்கள் 20 கி.மீ வரை கேரள பஸ்களில் அலைய வேண்டிய அவசியம் இனி இருக்காது.
இந்த ஆண்டு 15.11.2024 முதல் 16.01.2025 வரையில், (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பஸ்கள் (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. (சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2024 முதல் 30.12.2024 0 5.00 வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2024 முதல் 29.12.2024 வரை இச்சிறப்பு பஸ்கள் இயக்கப்படமாட்டாது).