திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே சுடுகாட்டில் நள்ளிரவில் ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டு மாந்திரீக பூஜை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அடுத்த கல்லாறு அருகே சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் உடுக்கை சத்தம் கேட்டுள்ளது. உடனே அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சந்தேகம் அடைந்து செல்போனில் டார்ச் லைட் அடித்தபடி அங்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு பெண் உள்பட 3 பேர், இளைஞர்கள் வருவதை பார்த்ததும் தப்பி ஓடினர். வழி தெரியாததால் 3 பேரும் சுடுகாட்டிற்கு சென்ற வழியிலேயே மீண்டும் வந்துள்ளனர்.
அவர்களை, இளைஞர்கள் மடக்கி பிடித்து, நீங்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள், நள்ளிரவில் இங்கு என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். சுடுகாட்டின் அருகே எரிமேடைக்கு சென்று பார்த்தபோது அங்கு ஆடு, பன்றி, கோழி ஆகியன பலி கொடுக்கப்பட்டு கிடந்ததை பார்த்த இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் சென்னை கோயம்பேட்டை சேர்ந்த பலராமன், ராஜபிரகாஷ் என்பதும், அந்த பெண், அவர்களது உறவினர் என்பதும் தெரிய வந்தது. மேலும், அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவு இன்றி உள்ளாராம். அவர் நலம் பெறுவதற்காக மேல்சோழங்குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு மந்திரவாதி மூலம் பன்றி, கோழி, ஆடு ஆகியவற்றை பலி கொடுத்து பூஜை செய்ததாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பன்றியை பலி கொடுத்து நள்ளிரவில் சுடுகாட்டில் மாந்திரீக பூஜை பெண் உள்பட 3பேர் சிக்கினர்: சென்னையை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.