இன்றைய பரபரப்பான நவீன உலகில் பல்வேறு நோய் உபாதைகள் ஸ்ட்ரெஸ் எனப் படுகிற மன அழுத்தம், மனச்சோர்வு என மக்கள் நிறைய துன்பங்களுக்கு ஆளாகிவருகிறார்கள். இதற்கு ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதோடு தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வந்தால் உடலும் மனதும் நன்றாக இருக்கும். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகாவும் சத்தான உணவு முறையும் மிகவும் முக்கியமானதாகத் தான் இருக்கிறது. மன அமைதி மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்கு யோகா மற்றும் தியானம் அவசியம் என்கிறார் யோகா பயிற்சியாளரும் டயட்ரீஷியனுமான பிருந்தா. மேலும் கல்விக்கான தனி பயிற்சி வகுப்புகளும் , ஓவியப் பயிற்சிகளையும் மாணவ மாணவிகளுக்கு சொல்லித் தரும் மிகச் சிறந்த ஆசானாகவும் இருந்து வருகிறார் சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிருந்தா.
பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொண்டது எப்படி?
நான் பிஎஸ்ஸி புட் சயின்ஸ் நியூட்ரிஷியன் மற்றும் புட் குவாலிட்டி கன்ட்ரோல் படித்துள்ளேன். கணவர் சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் கிராபிக் டிசைனர். திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் பிறந்த காலகட்டத்தில் முழுநேரப் பணிகளுக்கு செல்ல இயலவில்லை. அந்த நேரத்தில் சிறு உடல் உபாதைகள் காரணமாக யோகாவினை கற்றுக்கொண்டேன். அதன் பிறகு கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சாய் யோகா சென்டர் ஆரம்பித்து அங்கு யோகாசனம் மற்றும் டயட் குறித்த ஆலோசனைகள் சொல்லித் தருகிறேன். அதே நேரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு கல்விக்கான தனிப் பயிற்சி வகுப்புகளையும் பத்து வருடங்களாக சொல்லித் தருகிறேன். சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் எனக்கு அதிக ஆர்வம். தற்போது ஓவியப் பயிற்சி வகுப்புகளையும் நடத்திவருகிறேன். எங்கள் மாணவர்கள் இன்டர்நேஷனல் லெவலில் பல ஓவியப் போட்டிகளில் வென்றிருக்கிறார்கள். இந்தி வகுப்புகளையும் எடுத்து வருகிறேன். எனது மாணவர்கள் இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், மலேசியாவிலும் உள்ளனர். அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுத்துவருகிறேன். தற்காப்புக் கலைகளும் எனக்கு நன்றாகத் தெரியும்.
யோகா ஆர்வம் ஏற்பட காரணம்என்ன?
யோகா மீதிருந்த எனது ஆர்வம் காரணமாக டிப்ளமோ இன் யோகா படித்தேன். சில வருடங் களாக முறையான யோகா பயிற்சிகளையும் செய்து வந்தேன். அதன் பிறகு யோகாவை முழுநேர பணியாக செய்ய வேண்டும் என்கிற எனது ஆசை இரண்டு வருடங்களாகத் தான் நிறைவேறியது எனலாம். தற்போது எனது சாய் யோகா மையத்தில் ஆன்லைன் மூலமாகவும் , தனி வகுப்பாகவும் யோகா சொல்லி தருகிறேன். மேலும் பல குடும்பத் தலைவிகள், வேலைக்கு போகும் பெண்கள், கல்லூரி மாணவிகள் என பலரும் ஆர்வமாக யோகா கற்க வருகிறார்கள். அவர்களுக்கும் சரிவிகித உணவு முறைகளையும் அது குறித்த ஆலோசனைகளையும் சொல்லித் தருகிறேன். எனது சேனல் வீடியோக்கள் வழியாக பல்வேறு ஆலோசனைகள் சொல்லி வருகிறேன். யோகா செய்வதன் நன்மைகள் குறித்து பொதுவாக உடலை நெகிழ வைப்பதற்காக மட்டுமே யோகா செய்யப்படுகிறது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் யோகாசனங்கள் நமக்கு பலவிதமான நன்மைகளை அள்ளி தருகின்றன. ஒருவர் தொடர்ந்து யோகா செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கமுடியும்.பல்வேறு நோய்களை கட்டுக்குள் வைக்கும் திறன் யோகாவிற்கு இருக்கிறது. யோகா ,தியானம் போன்றவை உடல்நலனோடு மன நலனையும் பாதுகாக்கும். குறிப்பாக சர்க்கரை, மலச்சிக்கல், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடவும் யோகா உதவுகிறது.
யோகாவில் உங்கள் பயிற்சி வகுப்பின் தனிச்சிறப்புகள் என்ன?
நான் ஒவ்வொரு நபருக்கும் தனிக் கவனம் செலுத்தி யோகா பயிற்சியை சொல்லித் தருகிறேன். அவரவர் வயது, உடல்வாகு, உடல் நலப் பிரசனைகள் போன்றவற்றை உத்தேசித்து பயிற்சி முறைகளில் மாற்றம் செய்து கற்றுத் தருகிறேன். என்னிடம் குழந்தையின்மை பிரச்சினைக்காகக் கூட சிலர் யோகா கற்றுக் கொள்ள வந்தனர். அவர்களில் சிலருக்கு உடனடி பலன்களும் கிடைத்துள்ளது. அவர்கள் தற்போது கர்ப்பிணிக்கான பயிற்சியில் சேர்ந்து யோகாவை செய்துவருகிறார்கள். யோகாவின் பலன்களும் ஆளுக்கு ஆள் வேறுபடும். வெளிநாடுகளில் இருக்கும் பலரும் என்னிடம் ஆன்லைன் யோகா கற்று வருகிறார்கள். சிலர் அவர்களுக்கு வசதியான நேரங்களில் ஆன்லைன் வகுப்பில் கற்றுக்கொள்கிறார்கள். இந்த யோகா வகுப்பினை பலருக்கும் பிரத்யேகமாகத் தான் சொல்லி தருகிறேன். என்னிடம் வரும் பலரும் , எனது பயிற்சி வகுப்புகள் மிகுந்த பயனை தருவதாக சொல்லி வருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஆர்வமுடன் வருகின்ற அனைவருக்குமே யோகா கற்றுத் தருகிறேன்.
ஆரோக்கியமான வாழ்வுக்காக நீங்கள் அளிக்கும் டிப்ஸ்கள் என்ன?
ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா பயிற்சிகள் மட்டுமின்றி, உணவுக்கட்டுப் பாடு தொடர்பாகவும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. என்னென்ன மாதிரியான உணவுகளை எந்தெந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் என்னென்ன மாதிரியான சத்துக்கள் கிடைக்கும் என அறிந்து உண்ண வேண்டும். ஏனெனில் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்கள் தான் நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. எனவே யோகா மற்றும் தியானப் பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் ஒன்றிணையும் போது நோயிலிருந்து விரைவில் நிவாரணம் பெறமுடியும். குறிப்பாக இரவில் சீக்கிரமாக உணவினை சாப்பிட்டால் நல்லது. அதே போன்று இரவில் சீக்கிரமாக தூங்குவது சிறந்தது. அனைவருக்குமே எட்டு மணி நேர உறக்கம் அவசியம். அதிகாலை எழுந்து கொள்வதும், அதிகாலை யோகா பயிற்சி செய்வதும் உடலை செம்மையாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவும். அதன் பிறகு ஆரோக்கியமான உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் நோயற்ற வாழ்வினை பெறலாம். மேலும் நாள்முழுதும் சுறுசுறுப்பாக இயங்க யோகாசனம் தியானம் போன்றவை சிறப்பாக உதவும்.
யோகா குறித்த உங்கள் திட்டங்கள் என்ன?
எனக்கு யோகாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற எண்ணங்கள் இருக்கிறது. வருங்காலத்தில் யோகாவின் பயன்கள் குறித்தும். சரிவிகித உணவு முறைகள் குறித்தும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. பலரின் ஆரோக்கியம் குறித்த விஷயங்களுக்கு இவையெல்லாம் நல்ல பலனை தருமென நம்புகிறேன். அதற்காக இது குறித்து நிறைய இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன். குறிப்பாக யோகாவை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது குடும்ப உறுப்பினர்கள் உடல்நலனை போல தங்களது உடல்நலனைக் கவனித்து பராமரிக்க வேண்டும் என்பது தான். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” இது பழைய மொழிதான். ஆனால் நோயுற்ற பின்னே நாம் கற்கும் பாடம் என்பது புதுமொழி. அதனால் வருமுன் காப்போம் என்பதை கருத்தில் கொண்டு யோகாசனத்தையும் உணவுக் கட்டுப்பாடுகளையும் தினமும் மேற்கொண்டு நோயற்ற வாழ்வினை பெறுவோம் என்கிறார் யோகா தெரபிஸ்ட் மற்றும் டயட்டீஷியனுமான பிருந்தா. சமீபத்தில் சிறந்த பன்முகத் திறமைக்காக சுடரி விருதினை வென்றுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது.
– தனுஜா ஜெயராமன்
The post பன்முகத் திறமையில் மிளிரும் உணவுத்துறை நிபுணர் appeared first on Dinakaran.