புதுடெல்லி: காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கிய பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டுவதால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், அமெரிக்காவின் நியூயார்க்கில் மற்றொரு காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பன்னூனை கொல்ல சதி நடந்தது.
இதில், இந்திய தொழிலதிபர் நிகில் குப்தா என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இந்தியாவின் ரா பிரிவில் பணியாற்றும் விகாஸ் யாதவ் இந்த கொலை முயற்சியில் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறி அவர் துணை சதிகாரராக சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கனடா விவகாரத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் குற்றச்சாட்டால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, விகாஸ் யாதவ் கடந்த ஆண்டே டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி டெல்லி ரோகினி பகுதியில் வசிக்கும் தொழிலதிபரை காரில் கடத்தி, லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் மிரட்டி பணம் கேட்டதாக விகாஸ் யாதவ்வை (39) டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் தனது மகளின் மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
The post பன்னூன் கொலை முயற்சியில் தொடர்புடைய இந்திய உளவு அதிகாரி டெல்லியில் கைதானவர்: போலீசார் தகவல் appeared first on Dinakaran.