பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி

4 days ago 3

கரூர், மே 15: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நான் முதல்வன் கல்லூரிக் கனவு 2025 திட்டத்தை நேற்று துவங்கி வைத்ததை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியானது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளதாவது:
பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து பாடவாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளது என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விபரங்கள் தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் மாணவ, மாணவிகளின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும், வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி இந்த தருணத்தில் நடத்தப்படுவது மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

குறிப்பாக எதிர்காலத்தில் எந்தெந்த துறைகளில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. முன்னேறி வரும் அறிவியல் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப, மாணவ, மாணவிகள் தங்களது திறன்களை எவ்வாறு மென்மேலும் வளர்த்துக் கொள்ளலாம் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களை துறை வல்லுநர்கள் இந்த நிகழ்ச்சியில் எடுத்துரைக்கின்றனர். மேலும், மாணவ, மாணவிகள் தங்களுக்கு தகுந்த படிப்புகளை எப்படி தேர்வு செய்வது உள்ளிட்ட எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்கும் உயர்கல்வி படிப்பிற்கான இந்த சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சியை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர், உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு வெற்றிக் கதைகள், உயர்கல்வியின் முக்கியத்துவம், உயர்கல்வி தொடர ஆதரவு, நான் முதல்வன், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், பொறியியல், சட்டம், மீன்வளம் மற்றும் கலை மற்றும் அறிவியல் துறைகள் குறித்து பல்வேறு வல்லுநர்கள் வழிகாட்டி பேசினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பார்த்து பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி, மருத்துவக் கல்லூரி முதல்வர் லோகநாயகி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

The post பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article