சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதை மாத்திரைகளின் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெளிமாநிலங்களிலிருந்து ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டுவரும் நபர்களை கண்டுபிடித்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ராயப்பேட்டையில் உள்ள மால்களில் போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி போன்று ஏற்றிக்கொண்டு சிறுவர்கள் உட்பட பல்வேறு நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இதற்கு முடிவுகட்டும் விதமாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த 14ம் தேதி மொய்தீன் என்ற இளைஞர் போதை ஊசி செலுத்தியுள்ளார்.
இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். மொய்தீன் தாயார் அளித்த புகாரின் பேரில் போதை மாத்திரைகள் பயன்படுத்தியது, உடம்பில் போதை செலுத்திக்கொள்வது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மொய்தீன் நண்பர்களான அமித் ஷெரிப், இனையதுல்லா, கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சலீம் என்ற நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்களுக்கு எங்கிருந்து போதை மாத்திரைகள் கிடைக்கின்றன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவல்லிக்கேணியில் போதை ஊசியால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: 3 பேர் கைது appeared first on Dinakaran.