பந்தலூர் அருகே தொடரும் பரபரப்பு தொழிலாளர்கள் குடியிருப்பை மீண்டும் தாக்கி சேதப்படுத்திய புல்லட் யானை

15 hours ago 1

பந்தலூர் : பந்தலூர் அருகே காவயல் பகுதியில் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழக (டேன்டீ) தொழிலாளர் குடியிருப்புகளை புல்லட் யானை தாக்கி மீண்டும் சேதப்படுத்தியது. இதையடுத்து மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க மக்கள் தரப்பில் கோரிக்கை வலுத்து வருகிறது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி, பிதர்காடு வச்சரகம் பகுதியில் வனத்திலிருந்து அடிக்கடி வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஆண் யானையை வனத்துறையினர் ‘புல்லட்’ யானை என அழைக்கின்றனர்.

இந்த யானை கடந்த 1 மாதத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கியும் உடமைகளை சேதம் செய்தும், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை ருசித்தும், விவசாய பயிர்களை சேதம் செய்தும், வாகனங்களை தாக்கியும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து தெப்பக்காடு போன்ற வளர்ப்பு யானை முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வனப்பணியாளர்கள் உள்ளிட்ட 75 நபர்கள் 5 குழுக்களாக பிரிந்து கும்கி யானை உதவியுடன் புல்லட் யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.பகல் நேரங்களில் வனப்பகுதியில் இருக்கும் புல்லட் யானை இரவில் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை தாக்கி சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொளப்பள்ளி டேன்டீ காவயல் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புகளை தாக்கி சேதப்படுத்தியது. இதில் சில வீடுகளின் ஜன்னல், கதவுகள் சேதமாகின. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது.

இதையறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து குடியிருப்புகளை தாக்கி சேதப்படுத்தும் புல்லட் யானையை பிடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்கிடையே தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் புல்லட் யானையை பிடிக்கக்கோரி சேரங்கோடு ஊராட்சி மன்ற கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் டேன்டீ தொழிலாளர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு தொடர்ந்து வருகிறது.

புல்லட் யானையை பிடிக்க உத்தரவு

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நேற்று சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு புல்லட் யானையை பிடிக்க உத்தரவு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அதிகாரி வெங்கடேஷ் பிரபு தலைமையில் கால்நடை மருத்துவர்கள் கலைவாணன், ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறையினர், தேவாலா டிஎஸ்பி சரவணன் உள்ளிட்டோர் கும்கி யானைகள் உதவியுடன் டிரோன் கேமரா வைத்து புல்லட் யானையை கண்காணித்து வருகின்றனர்.

புல்லட் யானை சாமியார் மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் இருப்பதாக அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து புல்லட் யானையை சுற்றி வளைத்து பிடிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post பந்தலூர் அருகே தொடரும் பரபரப்பு தொழிலாளர்கள் குடியிருப்பை மீண்டும் தாக்கி சேதப்படுத்திய புல்லட் யானை appeared first on Dinakaran.

Read Entire Article