மன்மோகன்சிங் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்

15 hours ago 1

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அதன்விவரம் வருமாறு:
ரஷ்ய அதிபர் புடின்: மன்மோகன் சிங் ஒரு சிறந்த அரசியல்வாதி. பிரதமராகவும், பிற உயர் பதவிகளில் பணியாற்றியபோதும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், உலக அரங்கில் அதன் நலன்களை வலியுறுத்துவதிலும் அவர் நிறைய சாதித்துள்ளார். எங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர் தனிப்பட்ட பங்களிப்பை அளித்தார். அவருடன் நான் பலமுறை பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரை நினைவுகூருவோம்.

பாக்.துணைப் பிரதமர் இஷாக் தார்: இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த மன்மோகன் சிங்கின் மறைவு வருத்தமளிக்கிறது. பாகிஸ்தானில் பிறந்த அவர், ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் தலைவராக இருந்தார். அவரது ஞானம் மற்றும் மென்மையான நடத்தைக்காக அவர் நினைவுகூரப்படுவார். பிராந்திய பிரச்சினைகளில் அவரது அணுகுமுறை பரஸ்பர புரிதல், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை கூட்டு முன்னேற்றத்திற்கு அவசியம் என்ற அவரது நம்பிக்கையை பிரதிபலித்தது. பாக்.- இந்தியா உறவுகளை மேம்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் மக்களும், அரசும் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசிற்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்: இந்தியா, அமெரிக்கா நட்பு சிறப்பாக செயல்பட மிகச்சிறந்த சாம்பியன்களில் ஒருவராக மன்மோகன்சிங் திகழ்ந்தார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்: இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்து விட்டது. மன்மோகன் சிங்கின் ஆளுமையில் இந்தியா ஒரு சிறந்த மனிதரையும், பிரான்ஸ் ஒரு உண்மையான நண்பரையும் இழந்துவிட்டது. அவர் தனது வாழ்நாளை தனது நாட்டிற்காக அர்ப்பணித்தார். எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இந்திய மக்களுடனும் உள்ளன.

கனடா முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்: மன்மோகன்சிங் விதிவிலக்கான புத்திசாலித்தனம், ஒருமைப்பாடு மற்றும் ஞானம் கொண்ட ஒரு தனி நபர்’.

நேபாள முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா: ஒரு தொலைநோக்கு தலைவரும், அசாதாரணமான அரசியல்வாதியுமான டாக்டர் மன்மோகன்சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்: மன்மோகன்சிங் காலமானதைக் கேட்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் எப்போதும் அவருடன் பணிபுரிவதில் மகிழ்ச்சியடைந்தேன். அவர் ஒரு நல்ல தந்தையைப் போல், மாலத்தீவின் நல்ல நண்பராக இருந்தார்.

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச: மன்மோகன்சிங் பொருளாதார நிபுணர் மட்டுமல்ல இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பி.

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய்: இந்தியா தனது சிறந்த மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அசைக்க முடியாத நண்பராகவும் இருந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம்: எனது மதிப்பிற்குரிய மற்றும் அன்பிற்குரிய நண்பர் மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தியில் துக்கத்தின் கனம் என்னைத் தாக்குகிறது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்: இந்தியா-சீனா உறவுகளின் மேம்பாட்டிற்கு நேர்மறையான பங்களிப்பை அளித்தவர் மன்மோகன்சிங். அவரது பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக முக்கிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு சீனா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

* பிஎம்டபிள்யூ காரை விட மாருதி 800ஐ விரும்பினார்
பிரதமராக இருந்த போது மன்மோகன்சிங்கின் தலைமை மெய்ப்பாதுகாவலராக 3 ஆண்டுகள் பணியாற்றியவர் அசிம் அருண் ஐபிஎஸ். தற்போது உபி அரசில் சமூக நலத்துறை அமைச்சராக உள்ளார். அவர் மன்மோகன்சிங் குறித்து கூறும்போது,’ அவர் மிகவும் எளிமையானவர். பிரதமர் பதவி உபயோகத்திற்காக ஆடம்பரமான பிஎம்டபிள்யூ உட்பட உயர்-பாதுகாப்பு வாகனங்கள் இருந்தபோதிலும்,அவர் தனது மாருதி 800 காரில் பயணம் செய்வதை விரும்புவார். அவர் என்னிடம்,’ அசிம், எனக்கு இந்த காரில் (பிஎம்டபிள்யூ) பயணம் செய்வது பிடிக்கவில்லை. ஆனால் மாருதி 800ஐ கடந்து செல்லும் போது அவரின் பார்வை அந்த காரின் மீது இருக்கும். அவர் ஒரு நடுத்தர வர்க்கத்தவர் என்ற அடையாளத்தையும், சாமானியர்களை கவனிப்பதில் உள்ள தனது அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துவது போல் அந்த பார்வை இருந்தது. பாதுகாப்பு காரணங்களால் அவரால் மாருதி 800ஐ ஓட்ட முடியவில்லை. அதனால் எனது பொறுப்பில் தினமும் காரை ஸ்டார்ட் செய்வதும், பிரதமரின் இல்லத்தில் சிறிது நேரம் ஓட்டுவதும் எனது பணியில் அடங்கும். தினமும் ஒரு மணிநேரம் வாசிப்பதற்காக ஒதுக்கினார். அது புத்தகமாக இருந்தாலும் சரி, ஆய்வுக் கட்டுரையாக இருந்தாலும் சரி அவரது அறிவுத் தாகம் ஈடு இணையற்றது’ என்றார்.

* ஆதார், ஆர்டிஐ, 100 நாள் வேலை… சத்தமின்றி சாதித்த மன்மோகன்சிங்
2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக மன்மோகன்சிங் சப்தமில்லாமல் பல்வேறு சாதனைகளை செய்தார். அதன் விவரம் வருமாறு: ஆதார் உதயம்: மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஆதார் அடையாள அட்டை திட்டம் தொடங்கப்பட்டது. அவரது ஆட்சிக் காலத்தில் நேரடி மானிய உதவி திட்டமும் தொடங்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டம்: நகரங்களுக்கு இணையாக கிராமங்களை முன்னேற்ற 2005ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என்றழைக்கப்படும் இந்த திட்டம் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

தகவல் உரிமை சட்டம்: கடந்த 2005ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) அமல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் இதுவரை கோடிக்கணக்கான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தியதில் ஆர்டிஐ முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டாய கல்வி உரிமைச்சட்டம்: மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் கடந்த 2009ம் ஆண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் சட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் என பல்வேறு மகத்தான சாதனைகளை செய்துள்ளார் மன்மோகன்சிங். அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம்: இந்தியாவில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதால் விதிக்கப்பட்டு இருந்த பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஷ் புஷ் உடன் கடந்த 2005ம் ஆண்டில் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்தி 2006 ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி இந்தியா, அமெரிக்கா இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே ஒப்பந்தத்தை கைவிட அறிவுறுத்தியும், மன்மோகன் சிங் தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். பல்வேறு தடைகளை தாண்டி அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.

* மன்மோகன் ஊழலுக்கு எதிரானவர் அன்னா ஹசாரே சொல்கிறார்
மன்மோகன்சிங் ஆட்சியை வீழ்த்த பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி டெல்லியில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தவர் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. அவர் கூறுகையில்,’ பிறந்தவர்கள் இறக்க வேண்டும், ஆனால் சிலர் நினைவுகளையும் தங்கள் பாரம்பரியத்தையும் விட்டுச் செல்கிறார்கள். மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய திசையை வழங்கினார். அவர் ஊழலுக்கு எதிரானவர். அவரது ஆட்சிக்காலத்தில் தான் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் தொடர்பாக உடனடி முடிவுகளை எடுத்தார். அவர் எப்பொழுதும் நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களுக்காக எப்படி சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்பதைப் பற்றியும் சிந்தித்தார். அவர் எப்போதும் நாட்டின் நலனுக்காகவும் சமூகத்தின் நலனுக்காகவும் முன்னுரிமை அளித்தார். மன்மோகன் சிங் உடல் வடிவில் உலகை விட்டுச் சென்றாலும், மக்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருப்பார்’ என்றார்.

* மன்மோகன்சிங்கின் பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும்: ஆர்.எஸ்.எஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் மற்றும் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘பாரதத்தின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் மறைவால் ஒட்டுமொத்த தேசமும் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான அவரது சேவை மற்றும் பாரதத்திற்கான பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும், போற்றப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

* மன்மோகனை புகழ்ந்த ஒபாமா, ஜார்ஜ் புஷ்
அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது, இந்திய பிரதமராக மன்மோகன்சிங் இருந்தார். அப்போது மன்மோகன்சிங் குறித்து ஒபாமா கூறுகையில்,’இந்தியப் பிரதமர் பேசும்போதெல்லாம், உலகம் முழுவதும் அவருக்கு செவிசாய்க்கும்’ என்றார். 2008ல் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் கூறுகையில்,’ இந்திய மக்கள் உங்களை ஆழமாக நேசிக்கிறார்கள். நமது இரு நாடுகளையும் நெருக்கமாக கொண்டு வர நீங்கள் செய்த அனைத்தும் வரலாறு செய்யும் ஒன்று. உங்கள் நட்பை நான் பாராட்டுகிறேன், உங்கள் தலைமையைப் பாராட்டுகிறேன்’ என்றார்.

* ‘எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதாக உணர்கிறோம்’: மன்மோகன்சிங் பிறந்த பாக். கிராமத்தில் உருக்கம்
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பாகிஸ்தானில் ஜீலம் மாவட்டத்தில் உள்ள காஹ் கிராமத்தில் பிறந்தார். நேற்று முன்தினம் அவர் காலமானதால் அவர் பிறந்த பாக். கிராமம் சோகத்தில் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த அல்தாப் உசேன் கூறுகையில்,’ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இன்று எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதாக நாங்கள் உணர்கிறோம். இந்த கிராமவாசிகள் அனைவரும் ஆழ்ந்த மனவேதனை அடைந்துள்ளனர். இந்தியாவில் அவரது இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள அவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அது சாத்தியமில்லை. எனவே அவர்கள் துக்கம் அனுசரிக்க வந்துள்ளனர்’ என்றார்.

The post மன்மோகன்சிங் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article