பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

21 hours ago 1

சென்னை: கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. குடியரசுத் தினத்தையொட்டி ஒன்றிய அரசால் அறிவிக்கப்படும் இவ்விருது, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளில் வழங்கப்படும்.

அந்த வகையில், 2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ என மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்ட 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து டத்தெரிவித்துள்ளது. “தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்து போட்டிகள் மிகுந்த திரைத்துறையில் உச்சத்தில் ஒரு இடம் பிடித்து, அரியதொரு போட்டியில் உலக வரைபடத்தில் தன் பெயரை பொன்னேட்டில் பதித்த நண்பர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் கௌரவம் கிடைத்ததில் தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமை கொள்கிறது.

நடனமும், நடிப்பும் அடையாளமாய் குடும்பத்தில் தோன்றி, அவ்வடையாளங்களை விளங்கிய இன்னும் ஆழப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பரதம் என்னும் கலையை பரீட்சித்து, புது வடிவம் கண்டெடுத்து, அதைப் பாரெங்கும் புகழ் மணக்க ஆடிப் பெருமை சேர்த்த சகோதரி ஷோபனாவுக்கு பத்மபூஷன் கௌரவம் கிடைத்ததில் தென்னிந்திய நடிகர் சங்கம் பேரானந்தம் கொள்கிறது” என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

The post பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article