நன்றி குங்குமம் தோழி
ஒரு பெண் ஆரோக்கியமாக இருந்தால் அந்தக் குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் முன்பு கிராமப்புறங்களில் பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் நலன் குறித்த விழிப்புணர்வு இல்லை. இன்று பெண்களுக்கு தங்களின் ஆரோக்கியம் குறித்த புரிதல் ஏற்பட்டு இருந்தாலும், அதனை அவர்கள் மனதில் பதிவு செய்ய பல வருடமாக போராடி அதில் வெற்றியும் கண்டுள்ளார் டாக்டர் ராஜகுமாரி. சீர்காழி, திருவங்காடு, பூம்புகார் பகுதியில் மருத்துவராக பணிபுரிந்தவர், தற்போது டி.வி.எஸ்சின், னிவாசன் சர்வீஸ் அமைப்புடன் இணைந்து அங்குள்ள பெண்களுக்கு மேலும் பல வசதிகளை ஏற்படுத்தி வருகிறார்.
‘‘பூம்புகார் பகுதியில் தாய்-சேய் நலத்திட்டத்தில் தான் என் பணியினை முதலில் ஆரம்பித்தேன். நான் அங்கு சேர்ந்த போது அங்குள்ள பெண்களுக்கு தாய்- சேய் நலன் குறித்த விழிப்புணர்வு இல்லை. மருத்துவச்சி மூலமாகத்தான் பிரசவம் நடக்கும். பெண்கள் கருத்தரித்தாலும் மருத்துவமனைக்கு வரமாட்டார்கள். கருத்தடை செய்வது தவறு என்று எண்ணினார்கள். அதனால் அதிக குழந்தைபேறு, ஆரோக்கிய குறைவால் கருக்கலைப்பு, தாய்-சேய் இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது. இவை அனைத்தையும் மாற்றி அமைக்க முடிவு செய்தேன்.
ஆனால் நான் நினைத்தது போல் எங்க வேலை சுலபமாக இல்லை. காரணம், பெண்கள் எங்களைப் பார்த்தாலே திட்ட ஆரம்பிப்பார்கள். குடும்பக்கட்டுப்பாடு செய்யச் சொன்னதுதான் காரணம். அவர்களின் பெண் தன்மையினை தடுப்பதாக நினைத்தார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கும் என்று சிந்திக்கவில்லை. எங்களுக்கு ஒரு விஷயம் புரிந்தது. இவர்களின் மனநிலையை ஒரே நாளில் மாற்ற முடியாது. நிறைய போராட வேண்டும்’’ என்றவர் அதற்கான செயல்பாட்டில் இறங்க ஆரம்பித்துள்ளார்.
‘‘முதலில் செவிலியர் குழுவினை அமைத்து, ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று கர்ப்பிணிகள், பருவமடைந்த பெண்கள், கைக்குழந்தையுள்ள பெண்கள் அனைவரின் ஆரோக்கியம், நலன் குறித்த ரிப்போர்ட்கள் சேகரித்த போது, மக்கள் ஒத்துழைக்கவில்லை. அதனால் வாரம் ஒரு முறை பெண்களை அழைத்து அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை விவரித்தோம். இதற்கிடையில் சாதாரண பிரைமரி சென்டர் கிளினிக்காக இருந்ததை நாளடைவில் அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றினோம். அதில் பிரசவத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தினோம். எங்களின் தொடர் முயற்சியால் பெண்களிடம் மாற்றம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு வர துவங்கினார்கள். இந்த மாற்றம் ஏற்பட பத்து வருஷமானது’’ என்றவர், இப்போது சுகப்பிரசவம் மட்டுமில்லாமல் சிசேரியன் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
‘‘இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் கருத்தரித்த ஐந்து மாதம் பிறகுதான் மருத்துவரிடம் ஆலோசனைக்காக வருவாங்க. அதுவும் பிரசவத்தை வீட்டில் மருத்துவச்சி தான் பார்ப்பார். நாங்க அந்த நிலையை மாற்றினோம். கருத்தரித்த பெண்கள் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்பதை கட்டாயப்படுத்தினோம். அந்த நேரத்தில் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்கினோம்.
தொடர் ஸ்கேன் எடுப்பதன் நன்மையை புரிய வைத்தோம். இதைத் தொடர்ந்து மாதவிடா
ய் பிரச்னை, அதனால் ஏற்படும் சத்துக் குறைபாடு குறித்தும் கவனம் செலுத்தினோம். ஒவ்வொரு வாரமும் பூப்படைந்த பெண்களுக்கு செவிலியர் இரும்புச் சத்து மாத்திரையினை வழங்க துவங்கினார். இதன் மூலம் பெண்களின் உடலில் மாற்றம் ஏற்பட்டது. பிரச்னைகளை கட்டுப்படுத்த முடிந்தது. அடுத்து மிகவும் முக்கியமானது கருக்கலைப்பு. அது செய்வது சட்ட விரோதமானது, அவ்வாறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மேலும் குடும்பக்கட்டுப்பாட்டின் அவசியத்தை புரிய வைத்தோம்.
மேலும் பெண்களின் நலனுக்காக அரசு பல வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளது. அந்த திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மருத்துவமனையில்தான் பிரசவம் பார்க்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தினோம். இன்று பெண்கள் பிரசவம் மட்டுமில்லாமல் தங்களின் அனைத்து பிரச்னைக்கும் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
ஒரு பெண் மருத்துவரான என்னால் பெண்களின் நலனில் மாற்றத்தினை ஏற்படுத்த முடிந்திருக்கிறது என்று நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது’’ என்றவர், எஸ்.எஸ்.டி அமைப்புடன் இணைந்து செயல்படும் திட்டம் குறித்து விவரித்தார்.
‘‘மருத்துவ துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில்தான் எஸ்.எஸ்.டி அமைப்பினர் சீர்காழி, பூம்புகார் மற்றும் திருவங்காட்டில் உள்ள பெண்களின் நலன் குறித்து உதவ முன்வந்தார்கள். கடந்த இரண்டு வருடமாக இவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். குறிப்பாக பெண்கள் பள்ளியில் கழிவறை வசதி, இலவச நேப்கின் மற்றும் பதின்பருவ பெண்களுக்கு சுகாதாரம் குறித்தும் ஆலோசனை வழங்கி வருகிறோம்.
30 வயதிற்கு மேல் கருத்தரிக்கும் பெண்களுக்கு போதிய மருத்துவ வசதியினையும் அமைப்பு மூலம் ஏற்படுத்தி தருகிறோம். பிரசவ காலத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னை ஹைபர்டென்ஷன் மற்றும் நீரிழிவு. இதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் மொபைல் ஆம்புலன்ஸ் வசதிகளும் அமைத்திருக்கிறோம். இதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் குறித்து மேலும் பல திட்டங்களை அமைப்பு சார்பாக செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார் டாக்டர் ராஜகுமாரி.
தொகுப்பு: நிஷா
The post பத்து வருட போராட்டம்! appeared first on Dinakaran.