சென்னை,
தமிழ்நாட்டில் பத்திரிகைகளில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், பிழைத்திருத்துபவர் ஆகியோர் பணியில் இருக்கும் போது இயற்கை எய்தினால் அவர்களுடைய குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து குடும்ப உதவி நிதி வழங்கப்படுகிறது.
அதன்படி பத்திரிகையாளராக 20 ஆண்டுகள் பணிபுரிந்து மரணம் அடைந்திருந்தால் ரூ.5 லட்சமும், 15 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரமும், 10 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் வழங்கப்படும் குடும்ப உதவி நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நேற்று முன் தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கான அரசாணையை வெளியிட்டார். இதன்படி 24 மணி நேரத்தில் அந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நாள்தோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், அரசுத் திட்டங்கள் முதலியவற்றையும், இந்திய அளவிலும், உலக அளவிலும் அன்றாடம் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களையும் திரட்டி, பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு வழங்கித் தமிழ்நாட்டின் கல்வி, அறிவியல், அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிக்குப் பேருதவி புரிபவர்கள் பத்திரிகையாளர்கள்.
மழை, வெள்ளம், புயல், போராட்டங்கள் நிகழும் காலங்களிலும் எதிர்பாராமல் ஏற்படும் இடையூறுகளைப் பொருட்படுத்தாது, அல்லும்பகலும் அயராது பாடுபட்டு பத்திரிகை உலகின் வேர்களாக விளங்குபவர்கள் செய்தியாளர்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த செய்தியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பரிவுடன் செய்தியாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களின் மேன்மைக்காகவும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்கள்.
ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு ஒரு குழு மட்டுமே அமைக்கப்பட்டு, அது தொடர்பாக பிற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பத்திரிகையாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பத்திரிகையாளர் நலனைப் பேணிப் பாதுகாத்திடும் வகையில், பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால், பத்திரிகைத் துறையின் வரலாற்றில் முதன்முறையாக பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து உத்தரவிடப்பட்டு, நாளது தேதி வரையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 3,335 பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியமானது ரூ.10,000 என்பது ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியமும் ரூ.5,000 என்பது ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பணிக்காலத்தில் இயற்கை எய்திடும் பத்திரிகையாளர்களின் பணியின் தன்மைக்கேற்ப, அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப உதவி நிதியானது ரூ.3 லட்சம் என்பது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பணிக்காலத்தில் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு உதவிடும் வகையில் வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.2 லட்சம் என்பது ரூ.2 இலட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, நேற்றைய தினம் (17.12.2024) அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
அப்போது, தங்கள் மன்றத்தின் சார்பிலான சில கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். தமிழ்நாடு பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளின் மனுவினைப் பெற்றுக் கொண்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர்களின் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.5 லட்சம் என்பதை 24 மணி நேரத்தில் ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டார்கள். இதற்குரிய அரசாணை இன்று (18.12.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.