மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 27 ஆண்டுக்கு பிறகு தாரைவார்த்தது. அதன் தொடர்ச்சியாக சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் தோற்று 10 ஆண்டுக்கு பிறகு பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இழந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் பறிபோனது.
இந்த தோல்விகளின் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. 10 அதிரடி கட்டுப்பாடுகளை விதித்ததாக செய்திகள் வெளியாகின.
அதன்படி வீரர்கள் மைதானத்திற்கு செல்லும் போதும், பயிற்சியின் போதும் அணியினருடன்தான் பயணிக்க வேண்டும். குடும்பத்துடனோ அல்லது தனியாகவோ செல்லக்கூடாது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்கள் தங்கள் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை அழைத்து செல்லக்கூடாது. சுற்றுப்பயணத்தின்போது வீரர்கள் தனிப்பட்ட படப்பிடிப்பிலோ அல்லது விளம்பர நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்ளக்கூடாது. உள்ளூர் தொடர்களில் கட்டாயம் விளையாட வேண்டும் உள்பட 10 விதிமுறைகள் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த விதிமுறைகள் குறித்து ரோகித் சர்மாவிடம் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் கோபமடைந்த ரோகித் சர்மா, "இந்த விதிகளைப் பற்றி உங்களுக்கு யார் கூறியது? அது அதிகாரபூர்வமான பக்கங்களிலிருந்து வெளியானதா? அது முதலில் வரட்டும், நாம் பேசுவோம்" என்று காட்டமாக பதிலளித்தார். உடனே உடனிருந்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அவரை சமாதானப்படுத்தினார்.