சத்யஜித் ரேயின் இயக்கிய 'பதேர் பாஞ்சாலி' படத்தில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை உமா தாஸ்குப்தா. இவர் சிறுவயதிலிருந்தே மேடையில் நடிப்பதை வழக்கமாக கொண்டவர். அவர் பள்ளியில் படிக்கும் போது நாடகத்தில் நடித்ததைக் கண்ட சத்யஜித் ரே, 'பதேர் பாஞ்சாலி'யில் துர்கா கதாபாத்திரத்திற்காக அவரைத் தேர்ந்தெடுத்தார். பிபூதிபூஷன் பந்தோபாத்யாயின் நாவலை அடிப்படையாகக் கொண்ட 'பதேர் பாஞ்சாலி' திரைப்படம் உருவானது.
1955-ம் ஆண்டு வெளியான பதேர் பாஞ்சாலி திரைப்படத்தால், அவருக்கு பேரும் புகழ் கிடைத்தது. இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். அவருடைய சொந்த காரணங்களுக்காக அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல், திரைத்துறையை விட்டு விலகினார்.
இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். 84 வயதான இவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஒரே படத்தின் மூலம் பிரபலமான உமா தாஸ்குப்தாவின் மறைவு, திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.