பதில் என்ன?

2 months ago 10

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நவ.20ல் முடிந்து, 23ல் ரிசல்ட் அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் உள்ள 288 தொகுதியில் 235 இடங்களை பா.ஜ கூட்டணி வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விட்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் கடந்தும் இன்று வரை புதிய முதல்வர் பதவி ஏற்பு நடைபெறவில்லை. இன்று பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வாக உள்ளார். அவர் நாளை பதவி ஏற்க உள்ளார். முடிவுகள் அனைத்தும் எடுத்து முடித்த பிறகும் இத்தனை இழுபறி தேவையா?.

அதுவும் மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலத்தில் முழுநேர முதல்வர் இல்லாமல் காபந்து முதல்வர் தலைமையில் 11 நாட்கள் ஆட்சி நீடிப்பது நமது ஜனநாயகத்தின் அழகா? அதை விட முக்கியமாக சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவ.26ம் தேதி முடிவுக்கு வந்தபிறகும் கூட இன்னும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தாதது நமது அரசியல்சாசன சட்டத்தை அவமதித்தாகி விடாதா? இன்னும் எத்தனையோ கேள்விகள் மகாராஷ்ரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எழுந்துள்ளன.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக இந்தியா கூட்டணி தோல்வியுற்ற இடங்களில் விவிபேட் பயன்படுத்தப்பட்ட தொகுதிகளில் எல்லாம் அதில் பதிவான சீட்டுகளை கணக்கிட வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அந்த மனுக்களை நிராகரித்ததுடன், நீதிமன்ற அனுமதியை பெற்றுவிட்டு வரும்படி கூறியது இன்னும் அதிர்ச்சி அளித்தது. இவிஎம் எந்திரங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது முழு அளவில் பேட்டரி இயங்கியது இன்னும் அதிர்ச்சி.

இதை போல் எழுந்த இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு தேர்தல் கமிஷன் தரப்பில் எந்தவித பதிலும் இல்லை. ஓட்டுப்பதிவு நடந்த தினத்தில் மாலை 5 மணிக்கு பதிவான வாக்குகளுக்கும் அதன்பிறகு தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்குப்பதிவிற்கும் இடையே கிட்டத்தட்ட 7 முதல் 10 சதவீதம் வரை வாக்குசதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது பற்றி காங்கிரஸ் நேரடியாக புகார் தெரிவித்தது. இந்த புகாருக்கும் எந்தவித புள்ளிவிவர விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் தயாரில்லை. மாறாக ஓட்டுப்பதிவு அன்று நள்ளிரவு 11.30 மணிக்கு தெளிவான வாக்குசதவீதம் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளது.

இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் மல்ஷிரா தொகுதியில் மர்காத்வாடி கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்கள் ஊரில் சரத் பவார் கட்சியை சேர்ந்த உத்தம் ஜங்கரு 80 சதவீதமானோர் வாக்களித்ததாகவும் ஆனால், தங்கள் கிராமத்தில் ஜங்கருக்கு 1,003 வாக்குகளும், பா.ஜ வேட்பாளர் ராம் சத்புதேவுக்கு 843 வாக்குகளும் பதிவானதாக காட்டப்பட்டுள்ளது. இது சாத்தியம் இல்லை என்று கூறும் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் பா.ஜ வேட்பாளர் சத்புதேவுக்கு 100 அல்லது 150 வாக்குகளுக்கு மேல் கிடைத்திருக்காது என்றும் கூறுகிறார்கள்.

எனவே தங்கள் கிராமத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளிடம் கிராம மக்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் கிராமத்தில் வாக்கு சீட்டுக்களை பயன்படுத்தி தாங்களே மறுதேர்தல் நடத்த முடிவு செய்தனர். அதிர்ந்து போன தேர்தல் ஆணையம், மாவட்ட அதிகாரிகள் மூலம் தடைஉத்தரவை போட்டு வாக்குச்சீட்டு முறையில் மக்களே தேர்தல் நடத்த இருந்ததை தடுத்து விட்டது. இன்று ஒரு கிராமம் கொதித்தெழுந்ததை போலீஸ் உதவியுடன் தடுத்துவிடலாம். ஆனால் ஒட்டுமொத்த நாடும் இதே போல் ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டால்? அன்று தேர்தல் ஆணையத்தின் பதில் என்னவாக இருக்கும்?

The post பதில் என்ன? appeared first on Dinakaran.

Read Entire Article