பதவிக்காலம் முடிவதற்கு முன்பே இந்திய சூரியசக்தி கழக தலைவர் டிஸ்மிஸ்: அதானி ஊழல்களை மறைக்க முடியாது; காங். தாக்கு

3 hours ago 2

புதுடெல்லி: கடந்த ஆண்டு நவம்பரில், அதானி நிறுவனம் இந்தியாவில் சூரிய சக்தி மின் திட்ட ஒப்பந்தங்களை பெற ரூ.2029 கோடி லஞ்சம் வழங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீது வழக்கு தொடரப்பட்டது. சூரிய மின் சக்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்காக என்று கூறி அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை லஞ்சமாக அதானி கொடுத்தார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறைகேட்டில் ஒன்றிய அரசின் இந்திய சூரிய சக்தி கழகத்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால், இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது.

இந்த நிலையில், இந்திய சூரிய சக்தி கழக(எஸ்இசிஐ) தலைவராக பணியாற்றி வந்த ராமேஷ்வர் பிரசாத் குப்தாவை ஒன்றிய அரசு திடீரென டிஸ்மிஸ் செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 10ம் தேதி ஒன்றிய பணியாளர் நல அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், ராமேஷ்வர் பிரசாத் குப்தாவை இந்திய சூரிய ஆற்றல் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து பணி நீக்கம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவில் பணி நீக்கத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பதவிக்காலம் முடிவதற்கு ஒரு மாதம் முன்பாகவே பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து புதிய மற்றும் புதுப்பிக்க எரிசக்தி துறையின் செயலாளர் சந்தோஷ் குமார் சாரங்கிக்கு இந்திய சூரிய ஆற்றல் கழக(எஸ்இசிஐ) தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்.பி.குப்தாவை பதவி நீக்கம் செய்வதால் அதானியின் ஊழல்களை மறைக்க முடியாது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மீது அமெரிக்க அதிகாரிகள், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 20ம் தாக்கல் செய்த ஊழல் தொடர்பான குற்றப்பத்திரிகையில் பொதுத்துறை நிறுவனமான : இந்திய சூரியசக்தி கழகமும் சேர்க்கப்பட்டுள்ளது.

எஸ்இசிஐ-யின் பரிந்துரை அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் அதானியுடன் கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொண்டன. இந்த ஒப்பந்தங்களுக்கு ஈடாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ. 2,029 கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும், பின்னர் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக மறைமுகமாக ஒப்பு கொண்ட எஸ்இசிஐ, பின்னர் 2024 டிசம்பரில் மின்சார ஒப்பந்தம் வழங்கும் முறையை மாற்றியது.

இப்போது இந்திய சூரியசக்தி கழக தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.பி.குப்தா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எஸ்இசிஐ தலைவரை மாற்றுவதால் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமெரிக்காவின் ஊழல் குற்றச்சாட்டை மறைக்க முடியாது” என விமர்சித்துள்ளார்.

The post பதவிக்காலம் முடிவதற்கு முன்பே இந்திய சூரியசக்தி கழக தலைவர் டிஸ்மிஸ்: அதானி ஊழல்களை மறைக்க முடியாது; காங். தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article