பதவி பறிப்பை தடுக்க பார்ப்பவர்களிடம் எல்லாம் கெஞ்சிக் கொண்டிருக்கும் மலராத கட்சியின் மலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

1 month ago 4

‘‘இலைக்கட்சி கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பற்றி பேசாமல் ஆதரவாளர்கள் யார் யார் என கணக்கெடுப்பு நடத்தினாங்களாமே மாஜி அமைச்சர்கள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சி சார்பில் கிளை வாரியாக கூட்டம் நடத்தப்பட்டு வருகிறதாம்.. இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பற்றியும், 2026ல் நடைபெறக்கூடிய சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதம் செய்யப்பட உள்ளது. இதனால் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததாம்.. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நிர்வாகிகளும் கலந்துகொண்டாங்களாம்.. ஆனால், கிளை கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை பற்றி எதுவும் பேசப்பட வில்லையாம்.. அதற்கு மாறாக மாஜி அமைச்சர்கள் அவர்களுக்குள் போட்டியாக தனது ஆதரவாளர்கள் யார், யார் என கணக்கெடுப்பு தான் நடத்தப்பட்டிருக்கு.. கட்சியில் என்ன தான் வெளியுலகத்தில் இரண்டு பேரும் ஒன்றாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் பதவி என வரும்போது பழைய பகையை மறப்பது இல்லை என கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்குள் தலையில் அடித்துக்கொண்டாங்களாம்.. இந்த டாப்பிக் தான் மாவட்டம் முழுவதும் கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பதவி பறிபோவதை தடுக்க ஒவ்வொருத்தரிடமும் போய் கெஞ்சி கதறிய மாஜி போலீஸ்காரர், இனி எல்லாமே அவர்தான் என சைடு மாறிய கதை தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியின் தற்போதைய தலைவரான மாஜி போலீஸ்காரர் பதற்றத்தின் உச்சத்தில் இருக்காராம்.. கடந்த நான்காண்டுகளாக பதவி சுகத்தையும், அதன் பவரையும் அனுபவித்த அவரால் பதவி பறிபோகப்போவதை நினைத்து நித்தம் நித்தம் மனம் கசந்தழுகிறாராம்.. இவர் இருந்தால் இலைக்கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை என இலைக்கட்சி தலைவர் டெல்லியிடம் சொல்லியிருக்காரு.. இதை பரிசீலனை செய்து பார்த்த மேலிடம் மாஜி போலீஸ்காரரை தூக்கிடுறோமுன்னு உறுதி கொடுத்திட்டாங்களாம்.. உள்துறை மந்திரியும் உறுதியாக சொன்னதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறாராம் மாஜி போலீஸ்காரர். இதனால் அவருக்கு தெரிந்த எல்லோரிடமும் எப்படியாவது பதவியை காப்பாத்துங்கன்னு கெஞ்சிக்கிட்டிருக்காராம்.. யாரை பார்த்தாலும் டெல்லியிடம் சொல்லுங்க.. நீங்க சொன்னா கேட்பாங்கன்னு கண்ணீர் கசிய வேண்டுறாராம்.. அதே நேரத்தில் உச்ச நடிகர் ஒருவரிடமும் கதறியதாகவும் கட்சிக்காரங்க சொல்றாங்க..

எந்த பக்கமும் நமக்கு ஆதரவு இல்லையேன்னு தவிச்ச மாஜி போலீஸ்காரர், அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்காராம்.. இனிமேல் உள்துறை மந்திரியை நம்பி பிரயோஜனமில்லை என முடிவு செய்ததோடு, பிரதமர்தான் எனக்கு எல்லாமே அவர் சொன்னால் போதும். நான் தொண்டராவேன்னு சொல்லி சைடு மாறிட்டாராம்.. பிரதமராவது தனது பதவி பறிப்பை தடுத்து நிறுத்துவாருன்னு நினைக்கிறாராம்.. அதே நேரத்தில் இந்த பதவி பறிப்பு என்பது ஓராண்டுகாலத்திற்கு மட்டும்தான் இருக்குமாம்.. இலைக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து, அந்த கட்சியை தங்களின் அடிமையாக்கும் வரை தான் புதிய தலைவராம்.. அந்த வேலை முடிந்த பிறகு, தற்போது பரிதவிக்கும் மாஜி போலீஸ்காரர் தான் தலைவராக வருவாருன்னு இன்னொரு தகவலும் ஓடிக்கிட்டிருக்கு.. என்றாலும் என்னால் பதவி இல்லாமல் இருக்க முடியாதுன்னு இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவிக்கிறாராம் மாஜி போலீஸ்காரர்.. இந்நிலையில், புதிய தலைவர் பட்டியலில் நாள்தோறும் புதுப்புது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருதாம்.. இதில் ரெண்டுகோடி மக்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று தூங்காநகரத்து பேராசிரியர் ஒருவர் சொல்றாராம்.. தென் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி என்பவரும் அந்த பட்டியலில் கூடுதல் பெயராக இடம்பெற்றிருப்பதாக மலராத கட்சிக்காரங்க சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘விதிகளை திருத்தி தடாலடி காட்டியதால் புதுச்சேரியில் அதிர்ச்சியில் இருக்காங்களாமே மதுபான கடை மற்றும் பார் தரப்பு..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மதுபான கடைகள், ரெஸ்ட்ரோ பார்கள் என ஆயிரக்கணக்கில் இருக்கிறதாம்.. இங்கு பணியாளர் போர்வையில் குற்றவாளிகளும், ரவுடிகளும் வேலையில் இருப்பதாகவும், இதனால் அடிக்கடி சட்டம்- ஒழுங்கு பிரச்னை எழுவதாகவும் உரிய ஆதாரங்களுடன் அரசுக்கு புகார்கள் பறந்ததாம்..

அதிலும் வெளியூர் சுற்றுலாவாசிகளிடம் ரவுடிகள் குறிவைத்து பணத்தை சுரண்டும் செயல்கள் அரங்கேறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததாம்.. உரிமையாளர்கள் தங்களின் பாதுகாப்புக்காக திரைமறைவாக இப்பணியை வழங்கியிருந்த நிலையிலும், செயல்பாடுகள் திசைமாறவே கலால் துறையின் விதியையே திருத்தும் முடிவுக்கு அதிரடியாக இறங்கியதாம் புல்லட்சாமி அரசு.. அதன்படி இனிமேல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட எவரையும் பார்களில் வேலையில் இருக்கக் கூடாது என்ற அரசாணையும் தடாலடியாக ரெடியாகி இருக்கிறதாம்.. இதனால் மதுபான கடை உரிமையாளர், அனுமதி வைத்திருப்போர் தரப்பு பாதுகாப்பு குறித்த அதிர்ச்சியில் உறைஞ்சிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலைகளின் இளவரசியான குளுகுளு நகரத்தில் கிரகப்பிரவேசம் நடத்த கமுக்கமாக வேலை பார்த்துக்கிட்டு இருப்பது யாரு..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான குளுகுளு நகரம் இருக்கு.. இங்கு அப்சர்வேட்டரி பகுதியில் நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ஆடம்பர பங்களாவை கட்டியுள்ளனராம்.. இந்த பகுதியில் தனக்கும் ஒரு பங்களா வேண்டும் என்பது சேலத்துக்காரருக்கு நீண்ட கால ஆசையாம்.. இவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது பினாமிகள் பெயரில் சொகுசு பங்களாவின் கட்டுமானப் பணிகள் படு வேகமாக நடந்து வருது.. மறைந்த இலைக்கட்சியின் தலைவிக்கு நாடு என முடியும் மலைப்பகுதியில் பங்களா இருப்பதைப் போன்று தனக்கும் பங்களா அமைய வேண்டும் என சேலத்துக்காரர் ரொம்ப நாளாகவே கூறி வந்தாராம்..

அம்மையாரின் பங்களாவைப் ேபால சேலத்துக்காரருக்கும் பங்களா கட்டும் பணி கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டதாம்.. கட்டுமானப் பணிகள் முடிந்ததும், கிரகப்பிரவேசம் நடத்த சேலத்துக்காரர் திட்டமிட்டுள்ளாராம்.. கட்சியை சுத்தி பரபரப்பான சம்பவம் நடந்தாலும், தல தன் வேலையை கமுக்கமாக பார்த்துக்கிட்டுத்தான் இருக்காப்ல என்கின்றனர் இளவரசி பூமியின் இலைக்கட்சி நிர்வாகிகள்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post பதவி பறிப்பை தடுக்க பார்ப்பவர்களிடம் எல்லாம் கெஞ்சிக் கொண்டிருக்கும் மலராத கட்சியின் மலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article