மதுரை: ஓபிஎஸ் போல பதவி, அதிகாரத்திற்காக செயல்பட்டதில்லை. எனக்கு எச்சரிக்கை விடும் தகுதி உங்களுக்கு இல்லை என்று ஓபிஎஸ்சுக்கு உதயகுமார் பதிலடி தந்து உள்ளார். மதுரை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் பேட்டியளித்த ஓபிஎஸ், அதிமுக டெபாசிட் இழக்க முன்னாள் அமைச்சர் உதயகுமார்தான் காரணம் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், மாஜி அமைச்சர் உதயகுமார் வீடியோ பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா எனக்குத்தான் நற்சான்று கொடுத்தார் என ஓபிஎஸ் அடிக்கடி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஜெயலலிதா தங்கள் (ஓபிஎஸ்) மீதான நம்பிக்கை குறைபாட்டில், அப்போது அவர் தங்கள் மீது வைத்திருந்த அபிமானத்தை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதை நான் வெளியே சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மீது ஆணையிட்டு சொல்கிறேன். ஜெயலலிதாவின் மறு வடிவமாக இருக்கிற எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டால் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பு, ஜெயலலிதா பேரவை பொறுப்பு, மாவட்ட செயலாளர், எம்எல்ஏ, என இந்த நிமிடமே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன்.
அனைத்து பொறுப்புகளும், நான் விசுவாசத்தோடு கட்சிக்கு பணியாற்றியதற்கு கட்சித் தலைமை என்னைத் தேடிக் கொடுத்த பதவிகளாகும். ஓபிஎஸ் போன்று அதிகாரத்திற்காக, பதவிக்காக செயல்பட்டதில்லை. வாய்க்கு வந்ததை பேசி பழி சுமத்தி வருகிறீர்கள். உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக, எந்த எல்லைக்கும் போவீர்கள் என்பது தான் சமீப கால நடவடிக்கைகள் காட்டுகின்றன. இப்போது பிரச்னையே நீங்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான். எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் எனது பொறுப்புகளை நான் துறக்க தயாராக இருக்கிறேன். ஆனால், நீங்கள் அப்படி இல்லையே? பலாப்பழத்தில் நிற்பதற்கு யார் காரணம்? நீங்கள் பதவி ஆசையினாலே, ஒன்றிய அமைச்சராகி விடலாமா என்று கூட பார்த்தீர்கள். உங்கள் ஆசை என்ன என்பது எனக்கு தெரியும்.
என்னென்ன விபரங்கள் எல்லாம் பேசப்பட்டது தெரியும். அரசியல் நாகரீகம் கருதி நான் அதை சொல்லவில்லை. தேனி மாவட்டத்தில் அதிகாரம் தங்கள் பிள்ளைக்கு வேண்டும் என்று தான் நினைத்தீர்கள். உங்களுடைய சுயநலத்திற்காக, அதிகாரத்திற்காக நீங்கள் உண்மையை மறைத்து செயல்பட்டீர்கள். இதுதான் நீங்கள் கடைபிடித்த பாதையும், தர்மமும். ஆகவே எனக்கு எச்சரிக்கை விடும் தகுதி உங்களுக்கு இல்லை. நான் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். இன்றைக்கு உங்களுக்கு கட்சி வேஷ்டி கட்ட கூட முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தை ஒரு நிமிடம் யோசித்தால், உண்மையான விடை கிடைக்கும்.
இவ்வாறு பேசியுள்ளார்.
The post பதவி, அதிகாரத்துக்காக துடிப்பவர் எனக்கு எச்சரிக்கை விடும் தகுதி உங்களுக்கு இல்லை: ஓபிஎஸ்சுக்கு உதயகுமார் பதிலடி appeared first on Dinakaran.