பண்ருட்டி அடுத்த மருங்கூரில் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

3 months ago 9

கடலூர்: பண்ருட்டி அடுத்த மருங்கூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;

“விலங்கு அரம் பொருத சங்கின் வெள் வளை” – 2441

பண்டைக் காலத்தில் அரம் போன்ற சிறு கருவிகளைக் கொண்டு சங்கினை அறுத்து அணிகலன்கள் செய்ததைக் குறிப்பிடுகிறது சீவக சிந்தாமணி பாடல்.

இதற்குச் சான்றாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் 360 செ.மீ ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்கு வளையல்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஒரு பகுதியாகும்.

இதுவரை இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் இரும்புப் பொருட்கள், இராசராச சோழன் காலத்துச் செப்பு காசுகள், அஞ்சனக் கோல், அகேட், சூதுபவளம், கண்ணாடி மணிகள், ரௌலட்டட் பானை ஓடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் இந்த பகுதியில் சங்கறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளதையும், இப்பகுதி மக்கள் அந்த தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியுள்ளதையும் அறிந்துகொள்ள முடிகிறது. தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மேலுமொரு சான்று கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பண்ருட்டி அடுத்த மருங்கூரில் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Read Entire Article