பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா: தீ மிதிக்க குவிந்த பக்தர்கள்

5 hours ago 3

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கடந்த மார்ச் 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து தினமும் இரவில் அம்மன் புகழ் பாடும் பாடல்களை பாடியபடி மலைவாழ் மக்களின் பீனாச்சி வாத்திய இசை முழங்க கம்ப நடனம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பக்தர்கள் குண்டம் இறங்க ஏதுவாக 10 ஷெட்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஷெட்டிலும் 800 பேர் காத்திருக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க உபயதாரர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செட்டிலும் தங்கி உள்ள பக்தர்களுக்கு ஒவ்வொரு கலரில் கையில் கலர் பட்டை அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் திருவிழாவிற்கு வந்து செல்ல ஏதுவாக நாளை இரவு வரை அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு பணிக்காக 2000 போலீசார் ஈடுபட உள்ளதாக, மாவட்ட காவல் துறை சார்பில், அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று திங்கட்கிழமை குண்டம் அமைப்பதற்காக எரிகரும்புகள் அடுக்கி வைத்து சிறப்பு பூஜைகள் செய்து நெருப்பிடுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை (செவ்வாய்) அதிகாலை 3.30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர். சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த புதுக்குய்யனூர் பிரிவிலும், பவானிசாகர் சாலையில் வரும் வாகனங்கள் நிறுத்த ராஜன் நகர் பகுதியிலும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் பண்ணாரி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் 260 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியக் கச்சேரி, பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

The post பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா: தீ மிதிக்க குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article