சென்னை: பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தில் தமிழ்நாடு அரசு தற்போது ரூ.108.71 கோடியை மாநில அரசின் கூடுதல் நிதியாக விடுவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குடியிருக்கும் தோடா, இருளர், பனியன், காட்டுநாயக்கன், கோட்டா மற்றும் குரும்பா ஆகிய 6 பழங்குடியினர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஒரு வீட்டிற்கான அலகுத்தொகை ரூ.2 லட்சம் என ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டு, அத்தொகை 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசால் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதற்காக இன்றுவரை ரூ.22.466 கோடி பெறப்பட்டுள்ளது.
இதில், ஒன்றிய அரசின் பங்குத்தொகை ரூ.13.48 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத்தொகை ரூ.8.98 கோடியாகும். இந்நிலையில், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்ட அலகுத் தொகையான ரூ.2 லட்சம் வீட்டின் கட்டுமானத்திற்கு போதுமானதாக இல்லாததால் பழங்குடியின மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலமாக வீட்டின் கட்டுமான தொகையினை சமவெளி பகுதியில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கு ரூ.5,07,000 எனவும், மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கு ரூ.5,73,000 எனவும் உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு தற்போது ரூ.108.71 கோடியை மாநில அரசின் கூடுதல் நிதியாக விடுவித்து ஆணை வழங்கியுள்ளது.
The post பண்டைய பழங்குடியினருக்கான வீடு கட்டும் திட்டத்தில் கூடுதலாக ரூ.108.71 கோடியை விடுவித்தது தமிழ்நாடு அரசு: முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.