பண்டிகை என்றால் பளிச் முகம் கட்டாயம் . இப்போதே பார்லர் புக்கிங், ஃபேஷியல்,என திட்டமிட்டு இந்நேரம் முடித்திருப்பீர்கள். ஒரு சிலர் பிறகு பார்த்துக்கலாம் , இன்னும் நாட்கள் இருக்கே என தள்ளிப்போட்டு இருப்பீர்கள். விளைவு பார்லர் ஹவுஸ் ஃபுல் போர்டு வைத்திருப்பார்கள். கவலை வேண்டாம், இதோ வீட்டிலேயே எளிய வகையில் செய்துக்கொள்ள ஃபேஷியல்.
கிளினிங்
முகத்தை குளிர்ந்த பாலால் நன்கு துடைத்து விட்டு கழுவிக் கொள்ளவும். அல்லது உங்களின் எப்போதுமான ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவிக் கொள்ளலாம்.
மசாஜ்
ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஏதேனும் ஒன்றுடன் சிறிது கற்றாழை ஜெல், கலந்து நன்கு மசாஜ் செய்யவும். உங்களுக்கு ஆயில் சருமம் எனில் கற்றாழை ஜெல் மற்றும் தயிர் கலந்து மசாஜ் செய்யலாம் . நடு முதுகு, கழுத்து, முகம் என 15 நிமிடங்கள் நன்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யவும்.
நீராவி
நீராவி பிடிக்கும் பாக்ஸ் இருந்தால் பயன்படுத்தவும். இல்லையேல் எப்போதுமான சுடு நீரில் சிறிது பனீர் ரோஜா இதழ்கள் அல்லது செம்பருத்தி பூ இதழ்கள் கலந்து ஆவிப் பிடிக்கவும்.
ஸ்கிரப்
சர்க்கரை எடுத்துக்கொள்ளவும், மிகவும் மென்மையான சருமம் எனில் கசகசா எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது தேன் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து மூக்கு, நெற்றி, தாடை பகுதிகளில் நன்கு தேய்க்கவும். சர்க்கரை பயன்படுத்தும் போது சற்று மென்மையாக தேய்க்கவும். பின்னர் மூக்கின் நுனி கருப்பு திட்டுக்களை கூர்மை இல்லாத ஏதேனும் கோனி ஊசி, அல்லது நகவெட்டியில் இருக்கும் நகக் கிளினரைக் கொண்டு சுரண்டி கருப்பான திட்டுகளை அகற்றவும். ( பாதுகாப்பு முக்கியம்)
ஃபேஸ் பேக்
தயிர், கடலை மாவு, தேன், கஸ்தூரி மஞ்சள், கலந்து பேஸ்டாக மாற்றி முகத்தில் தடவி 20 நிமிடங்கள்
வைத்திருக்கவும்.
மாய்ஸ்ச்சர்
கடைகளில் கிடைக்கும் நல்ல பிராண்ட் மாய்ஸ்ச்சர் கிரீம் பயன்படுத்தலாம். அல்லது சிறிது ஐஸ் ஒத்தடம் கொடுக்கவும். மசாஜ் மற்றும் ஆவியால் திறக்கப்பட்ட சரும துளைகள் இந்தச் செயலால் சற்றே இளைப்பாறி மூடிக் கொள்ளும். அடுத்த 6 மணி நேரங்கள் வெயிலில் நேரடியாக சருமத்தைக் காட்டாமல் பார்த்துக்கொள்ளவும்.
– விஜி
The post பண்டிகைக்கு பளபளவென தயாராகுங்க! appeared first on Dinakaran.