சென்னை,
தீபாவளி உட்பட பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை போக்குவரத்துத்துறை கைவிட வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் தேவைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுடன், தனியார் பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும், புதிய பேருந்துகள் வாங்குவதற்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்க முன்வராத தி.மு.க. அரசு, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அப்பேருந்துகளின் ஓட்டுநர்களை வைத்தே இயக்க முயற்சிப்பது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்கு ஆகும்.
போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியார் நிறுவனங்களின் மூலம் ஆட்சேர்ப்பு, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமனம் வரிசையில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதும் போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியே என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
எனவே, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் தொழிலாளர் விரோதப் போக்கை உடனடியாக கைவிடுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என போக்குவரத்துத் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.