பணிகள் முடிந்து தயார் நிலை: பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா எப்போது?

2 days ago 2

ராமேசுவரம்,

பாம்பன் கடலில் தற்போதுள்ள ரெயில் பாலம் 110 ஆண்டுகளை கடந்த பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் வடக்கு கடல் பகுதியில் ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் சுமார் 75 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் கட்டப்பட்டுள்ளது.

பாம்பன் கடலில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாலம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியால் புதிய ரெயில் பாலம் திறந்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அருகிலுள்ள பழைய தூக்குப்பாலத்திலும் உப்பு காற்றால் துருப்பிடிக்காத அலுமினிய பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க வர உள்ளதால் இதுவரை 3 கட்டமாக ரெயில் மற்றும் கப்பல் இயக்கியும் ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு விட்டது. ஆனால் இதுவரை புதிய ரெயில் பாலம் திறப்பு விழா தேதி குறித்து ரெயில்வே துறை மூலம் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.

ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் மாதம் பிறந்துள்ள நிலையில் இதுவரையிலும் புதிய ரெயில் பால திறப்பு விழா தேதி அறிவிக்கப்படாத நிலையே இருந்து வருவதால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். எனவே பாம்பன் புதிய ரெயில் பாலத்தை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Read Entire Article