நீண்ட வருடமாக ஒரு வேலையில் இருந்துவிட்டு பணி ஓய்வு என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு புறம் தனிமனித வாழ்வியலை பல விஷயங்களில் இடையூறு செய்யும். வயது மூப்பு என்கிற தாழ்வு மனப்பான்மையை சிலருக்கு உண்டாக்கும். வீட்டிலும், குடும்பத்தாலும் நாம் தேவையற்றவர் என ஒதுக்கி வைக்கும் நிலை உண்டாகுமோ என பல மனக் குழப்பங்களையும் கூட உருவாக்கும். ஆனால் இவ்வளவு நாள் ஓடிய ஓட்டத்திற்கு இனி ஓய்வும், மன அமைதியும் கிடைக்கப் போகிறது என்கிற மகிழ்வுடன் பணி ஓய்வு காலங்களைக் கழித்தால் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும். இத்தனை காலமும் குடும்பத்துக்காக ஓடிய கால்களை நிறுத்தி சற்றே உங்களுக்காக பொறுமையாக நடக்க கடவுள் கொடுத்த அற்புத காலம் இது. இதனை எப்படி மேலும் மகிழ்வாக மாற்றலாம். இதோ சில பயனுள்ள டிப்ஸ்.
*தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
* மனைவியுடன் செல்லுங்கள்.
*அதிக நெரிசலான நேரங்களில் சாலையில் செல்ல வேண்டாம்.
*உடலை உறுதியாக வைத்துக் கொள்கிறேன் என அளவிற்கு அதிகமாக உடற்பயிற்சியும், நடைப் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டாம்.
* டி.வி பார்ப்பது, மொபைல் பயன்படுத்துவது, புத்தகங்கள் படிப்பது என எல்லா விஷயங்களிலும் ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொள்ளவும்.
* டாக்டர் அனுமதியின்றி மாத்திரை, மருந்து பயன்படுத்த வேண்டாம்.
* மெடிக்கல் செக் அப் போவதை தள்ளிப் போட வேண்டாம்.
* பி.எப். போன்ற சேமிப்புகளுக்கு உடனே உயில் எழுத வேண்டாம்.
* ஓய்வூதிய சேமிப்பிலிருந்து சொத்து வாங்க வேண்டாம்.
*வௌியில் செல்லும் போது, அடையாள அட்டை, ஆதார் போன்றவற்றை கொண்டு செல்ல வேண்டும். பர்ஸ், மொபைல் போன் கவரில் அவற்றை பர்மனென்ட்டாக பத்திரப்படுத்தி விடலாம்.
*முக்கிய தொலைபேசி எண்கள், இரத்தப் பிரிவு போன்ற விவரங்களையும் பர்ஸில் வைத்துக் கொள்ளலாம்.
*பழைய விஷயங்களையே பேசிப் பேசி மருக வேண்டாம். எதிர்காலம் குறித்து அச்சப்படவும் வேண்டாம்.
* உடம்பிற்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளுமோ, அதை மட்டுமே சாப்பிடவும். பிடிக்காத உணவுகளைத் தவிர்க்கவும்.
* பாத்ரூம், கழிப்பறைகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்.
* புகை பிடிப்பது, குடிப்பது போன்ற பழக்கங்களை கண்டிப்பாக விட்டு விடவும்.
* தற்பெருமை பேசுவதையும், தன்னைப் பற்றியே பேசுவதையும் தவிர்க்கவும்.
* கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
* சொத்து குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம். குறிப்பாக அக்கம் பக்கத்து வீட்டார், சமீபத்தில் பழக்கமானவர்களிடம் பகிரக் கூடாது.
* உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும்.
* சாப்பிட்டவுடனேயே தூங்க வேண்டாம்.
* யாருக்கும் கடன் தர வேண்டாம்.
*வலிந்து சென்று அறிவுரை, அனுபவ உரை வழங்க வேண்டாம்.
* மற்றவர்கள் நேரத்திற்கு மரியாதை தரவும்.
* ஓய்வு பெற்றோர் சங்கங்களில் சேர்ந்து, ஒத்த வயதினருடன் எண்ணங்களை பரிமாறிக் கொள்ளலாம். கோப, தாபங்களை தவிர்க்க வேண்டும்.
* தூக்கம் வரவில்லையெனில் டி.வி.யை ஆன் தேய்தோ, பேசியோ அடுத்தவர் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்.
* மாற்று அபிப்பிராயங்களை அனுசரிக்கவும்.
* வீட்டிலும், வெளியிலும் புகார் சொல்வதையும், புறம் பேசுவதையும் தவிர்க்கவும்.
*உடல் பிரச்னைகள் குறித்து அடிக்கடி பேச வேண்டாம். அது மற்றவரையும், உங்களையும் சேர்த்து இடையூறு செய்யும்.
* ஆதார துணையே மனைவி/கணவர்தான். அதனால் அவருடன் சண்டை போட வேண்டாம்.
*ஆன்மிக நாட்டம் நல்லது. கண்மூடித்தனமாக பக்தி என விரதம் இருப்பதைத் தவிர்க்கவும்.
*அலுவலகம் செல்லவில்லை என்பதற்காக ஏனோதானோ என உடைகள் உடுத்தாமல் தூய்மையான, துவைத்த ஆடைகளை அணியவும். அது பேரன், பேத்திகளுக்கும் நல்லது.
*இஸ்திரி செய்யப்பட்ட உடைகளை அணிவது, உடல்சுத்தம் பேணுவது, தன்னம்பிக்கையை வளர்க்கும்.
*நெறுக்குத் தீனி, வெளியில் உண்பது, எண்ணெய் பண்டங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும்.
*வீட்டிலுள்ளோருக்கு எளிய உதவிகள் செய்யவும்.
*அண்டை, அசலுடன் நட்பு பாராட்டலாம். விவாதங்களை தவிர்க்கவும்.
*புன்னகையுடன் இருக்கவும். புத்தகங்கள் படிக்கலாம். விருப்பப் பாடல்களை யாரும் வீட்டில் இல்லாத போதும், மற்ற நேரத்தில் ஹெட்போன் அணிந்தும் கேட்கவும். பழைய பாடல்களை எல்லோரும் விரும்புவார்கள் எனச் சொல்ல முடியாது.
*பால்ய நண்பர்கள் சந்திப்பு, ஒத்த வயதுடைய மக்கள் கூடுகைகளில் கலந்துகொள்ளலாம்.
*மகன்/மகள், மருமகன்/மருமகள், பேரன்/பேத்தி உள்ளிட்டோரின் அனுமதியின்றி அவர்கள் அந்தரங்க விஷயங்களில் கருத்து சொல்ல முயற்சிக்க வேண்டாம். பெண்கள் எனில் குறிப்பாக மருமகள்களுக்கு வகுப்பெடுக்க முயற்சிக்க வேண்டாம்.
*உங்களுடன் ஒப்பிட்டு வீட்டாரை கண்டிக்கவும் செய்யாதீர்கள்.
* குடும்பத்தார் எங்கே அழைத்தாலும் தவிர்க்காமல் கலந்து கொள்ளுங்கள். உடல் ஒத்துழைக்கவில்லை எனில் அதை சரியாக சொல்லி புரிய வைத்து ஓய்வு எடுங்கள்.
*வாழ்ந்த காலத்தை விட, வாழப் போகும் காலம் கொஞ்சமே. அதை மகிழ்வுடன் கழிப்போம் என உறுதி கொள்ளவும்.
– * மல்லிகா குரு
The post பணி ஓய்வு பாரம் அல்ல வரம்! appeared first on Dinakaran.