
வாஷிங்டன் டி.சி.,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது.
ஓராண்டுக்கு மேலாக நடந்த போரில், காசா பகுதியில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த சூழலில், அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில், பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் பணய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
எனினும், சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் அனைவரும் வருகிற சனிக்கிழமை மதியத்திற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்படி அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விடுவேன் என கூறினார். டிரம்ப் விதித்த இந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், இதுபற்றி சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டு உள்ள பதிவில், 3 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து உள்ளது. அவர்களில் அமெரிக்க குடிமகனும் ஒருவர். அவர்கள் நல்ல நிலையில் காணப்படுவது போல் உள்ளது என தெரிவித்து உள்ளார்.
எந்த பணய கைதியையும் விடுவிக்கமாட்டோம் என அவர்கள் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கைக்கு இது முரண்படுகிறது. அனைத்து பணய கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என விதித்து இருந்த காலக்கெடு நேற்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், அதுபற்றி இஸ்ரேல்தான் இனி முடிவு செய்ய வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.