தீக்சனா அபார பந்துவீச்சு... ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை

3 hours ago 1

கொழும்பு,

இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட ஒரு நாள் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 214 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சரித் அசலங்கா 127 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சீன் அப்போட் 3 விக்கெட்டும், ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஹார்டி, நாதன் எல்லீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ஆஸ்திரேலிய அணியினர் இலங்கையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் ஜேக் பிரேசர் மெக்குர்க் 2 ரன்னிலும், கூப்பர் கன்னோலி 3 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 12 ரன்னிலும், மார்னஸ் லபுஸ்சாக்னே 15 ரன்னிலும், மேத்யூ ஷார்ட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

தொடர்ந்து ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி - ஆரோன் ஹார்டி இணை சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது. இந்த இணையை கேப்டன் சரித் அசலங்கா பிரித்தார். இதில் அலெக்ஸ் கேரி 41 ரன்னில் அசலங்கா பந்துவீச்சில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் புகுந்த வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

இதில் சீன் அப்போட் 20 ரன்னிலும், ஆரோன் ஹார்டி 32 ரன்னிலும், நாதன் எல்லீஸ் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இறுதியில் ஆஸ்திரேலியா 33.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 165 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 49 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.

இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 14ம் தேதி நடக்கிறது.

Read Entire Article