திருச்சி, மார்ச் 10: இருவேறு சம்பவங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். திருச்சி, தென்னுார் அன்னை சத்யா நகரை, சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (42). மார்ச்.7ம் தேதி தென்னூர் கண்ணதாசன் சாலை சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 மர்ம நபர்கள் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து தென்னுார் வாமடத்தைச் சேர்ந்த அரவிந்தன் (29), மணிவேலன் (28) மற்றும் ஜீவாநகர், எல்லை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஸ்டீபன் (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களது கூட்டாலியான வாமடத்தைச் சேர்ந்த ராஜ்குமாரை தேடி வருகின்றனர். இதில் அரவிந்தன் என்பவர் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திருச்சி, ஏர்போர்ட், செம்பட்டு, பட்டத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் சங்கர் (49). குழவாய்பட்டி சாலையில் தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். மார்ச்.7ம் தேதி இவரது கடைக்கு வந்த மர்ம நபர் சங்கரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000ஐ பறித்து சென்றார். இதுகுறித்து புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து ஏர்போர்ட் காமராஜர் நகர், வஉசி தெருவை சேர்ந்த தர்மா (எ) தர்மசீலன் (25) என்ற ரவுடியை கைது செய்தனர்.
The post பணம் பறிக்க முயற்சி கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிகள் கைது appeared first on Dinakaran.