பட்டுக்கோட்டை,பிப்.10: பட்டுக்கோட்டை பகுதியில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். காலை 9 மணிவரை வாகனங்களில் முகப்பு விளக்கு எரியவிட்டு சென்றனர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று அதிகாலை முதல் 9 மணி வரை பனிமூட்டத்தால் சூழ்ந்தது.
பட்டுக்கோட்டை மட்டுமல்லாது அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான முதல்சேரி, செட்டியக்காடு, பள்ளிகொண்டான், நடுவிக்காடு, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் 9 மணி வரை பனிமூட்டத்தால் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. குறிப்பாக பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் மற்றும் திருக்கோயில் குளம் ஆகியவை பனிமூட்டத்தால் சூழ்ந்தது. பட்டுக்கோட்டை புறவழிச்சாலை பகுதிகளிலும் எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. குறிப்பாக பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது.
இது குறித்து வாகன ஓட்டி பட்டுக்கோட்டை இளைஞர் முத்து மற்றும் 6ம் வகுப்பு பள்ளி மாணவி இனியா ஆகியோர் கூறுகையில், மார்கழி மாதம் என்றால் பனி. ஆனால் வழக்கத்திற்கு மாறாக தை மாதத்தில் இந்த அளவிற்கு பனி மூட்டத்தை நாங்கள் பார்த்ததில்லை. மிகவும் சிரமமாக உள்ளது. நாங்கள் சிறுவயதாக இருந்தாலும் எங்களாலே இந்த பணியை தாங்க முடியவில்லை. வயதானவர்கள் இந்த பணியை எப்படி தாங்குவார்கள். எங்கள் பாட்டி தை மாதம் தரையே குளிரும் என்பார்கள். அது உண்மைதான் இது போன்ற பணியை நான் பார்த்ததே இல்லை என்றனர்.
The post பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.