பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறுவனை அடித்து கொன்ற திருவல்லிக்கேணி ரவுடி கைது

2 weeks ago 3

 

சென்னை, நவ.5: ராயப்பேட்டையில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவனை அடித்து கொலை செய்த திருவல்லிக்கேணி ரவுடியை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ஷாம் (17), தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 31ம் தேதி நண்பர்களான சூர்யா, சஞ்சய் ஆகியோருடன் ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள செல்லம்மாள் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் ஷாம் பட்டாசுகளை கையில் பிடித்து வீசியுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த ரவுடி முதலை கார்த்திக் (27) மீது பட்டாசு விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவுடி முதலை கார்த்திக் சிறுவன் ஷாமை கையால் ஓங்கி கழுத்தில் குத்தியதில் ஷாம் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த உடன் இருந்த நண்பர்கள் ஷாமை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு ஷாமை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உயிரிழந்த ஷாமின் தாய் தனலட்சுமி ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் ரவுடி முதலை கார்த்திக் மீது புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் ரவுடி முதலை கார்த்திக் சிறுவன் ஷாமை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் ரவுடி முதலை கார்த்திக் மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையே கடந்த 3 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த ரவுடி முதலை கார்த்திக்கை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ரவுடி முதலை கார்த்திக் மீது எழும்பூர், ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறுவனை அடித்து கொன்ற திருவல்லிக்கேணி ரவுடி கைது appeared first on Dinakaran.

Read Entire Article