
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், திருத்தங்கல், பனையடிபட்டி தெருவைச் சேர்ந்த பாலகுருசாமி (50 வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவகாசி வட்டம், தாயில்பட்டி, லட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் (50 வயது) மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் சாத்தூர் வட்டம், படந்தால், நடுத்தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி (37 வயது), சிவகாசி வட்டம், தாயில்பட்டி, பசும்பொன் நகரைச் சேர்ந்த ராஜசேகர் (29 வயது), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் ராம் (28 வயது) மற்றும் ரமேஷ் (20 வயது) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.