பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்குக: செல்வப்பெருந்தகை

1 week ago 4

சென்னை: பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு தனியார் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். இத்தகைய வெடிவிபத்து சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதும், அப்பாவித் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்கின்ற வகையில் பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன.

அதிகாரிகளின் உரிய கண்காணிப்பு இல்லாத நிலையில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஒழுங்குமுறை நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைகளின் இறுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பான முறையில் பட்டாசு தொழில் தொடர்ந்து நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணமும் அரசு செலவில் உயரிய சிகிச்சையும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரையில் குணமடைய விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்குக: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Read Entire Article